எண்ணாயிரம் மலை
செஞ்சி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டம்பட்டினை அடுத்து இடதுபுறமாக 6 கி.மீ சென்றால் இம்மலையினைக் காணலாம். குன்னத்தூர் மற்றும் எண்ணாயிரம் எனும் ஊர்களுக்கு இடையில் அமைந்துள்ளது இந்த எண்ணாயிரம் மலை. உள்ளூர் மக்கள் இதனை மேல்கூடலூர் மலை, ஐவர் மலை, பஞ்சபாண்டவர் மலை, திருநந்தகிரி மலை என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
கத்தரி வெயில் காரணமாக இன்று காலை 9 மணியளவிலேயே பயணத்தை தொடங்க இதமான காலை வெயில் மூர்க்கமாகும் முன்னமே அடையவேண்டிய தடத்தினை அடைந்துவிட்டேன்.
எவ்வித மெனக்கெடலும் இன்றி தூரத்தில் இருந்து பார்க்கும்போதே மலையில் படிக்கட்டுகள் வண்ணம் தீட்டப்பட்டு இதுதான் நீ வர வேண்டிய வழி வேறெங்கும் தேடி அலைய வேண்டாம். என வழிகாட்ட வாகனத்தை ஒரு வேப்பமர நிழலில் இளைப்பாறவிட்டு 300 மீட்டர் மலையை நோக்கி நடக்க மலையேறும் பாதையை அடைந்தேன்.
தமிழ்நாட்டிலேயே ஒரே இடத்தில் அதிக சமணப் படுக்கைகள் மொத்தமாக 35 உள்ள இடம் இதுமட்டுமே . இந்த மலையில் அமைந்துள்ள ஒவ்வொரு படுக்கையும் சுமார் 7அடி நீளமும், 2அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. இவை யாவுமே பல்லவர் காலத்தை சேர்ந்தவை.
திவான் வடிவிலான மூன்று இருக்கைகளும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கியிருந்த முனிவர்கள் மக்களுக்குப் போதனைகள் வழங்கியுள்ளனர்.
ஓர் இடத்தில் செதுக்கப்பட்ட இவ்வடிவிலான இருக்கையில் அமர்ந்தவாறே மலையைச் சுற்றிலும் காணக் கண் கோடி வேண்டும். அவ்வளவு அற்புதமான பார்வை மாடம் வடிவில் அமைத்திருப்பதைக் காணும்போது பல்லவர்களின் கைவண்ணத்திற்கு சபாஷ் சொல்லலாம்.
இங்குள்ள பாறை ஒன்றில் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் ஒரே தொகுப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. முதலாவது சமண சமயத்தின் 23 ஆம் தீர்த்தங்கரான பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் ஆகும். படமெடுத்தாடும் ஐந்துதலை நாகத்தின் கீழே, தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில் பார்சுவநாதர் காட்சி தருகிறார். அருகில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பத்தை சிலர் பார்சுவநாதரின் இயக்கன் தரணேந்திரன் என்றும், சிலர் இயக்கி பத்மாவதி என்றும் கருதுகின்றனர்.முதலாம் பராந்தகனின் உருவமாக இருக்கக்கூடும் என எனது வழிகாட்டி அனந்தபுரம் கோ.கிருட்டிணமூர்த்தி ஐயா அவர்கள் கூறியுள்ளார்.
இந்தக் குன்றில் கற்படுக்கைகளைச் சுற்றி ஐந்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று பல்லவ மன்னர் நிருபதுங்கவர்மனின் (கி.பி. 850 முதல் 882) இரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி.867 ஆம் ஆண்டு) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டாகும்.
கல்வெட்டு வாசகம்: 1ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய நிருபதொங்கர்கு யாண்டு இரண்டாவது பனைஊர் நாட்டுச் சேந்த மங்கலத்து ஸ்ரீமூலஸ்தானத்து தேவற்குத் திருவிளக்குக்கு அதிகாரிகளோணங்காரிகுடையார் வைத்த ஆடு எழுநூற்றைம்பது.
விளக்கம்:
நிருபத்துங்க மன்னனது இரண்டாம் ஆட்சியாண்டில் பனையூர் நாட்டைச் சேர்ந்த சேந்தமங்கலத்திலுள்ள மூலஸ்தானத்து தேவர் (பார்சுவநாதர்) திருவுருவத்தின் முன்னர் விளக்கு எரிப்பதற்காக வேண்டி ஓணங்காரி குடையார் என்னும் அதிகாரி எழு நூற்று ஐம்பது ஆடுகளை தானமாக வழங்கியுள்ளார்.
இதிலிருந்து மேல்கூடலூரின் பண்டைய பெயர் சேந்தமங்கலம் என அறிய முடிகிறது. மேற்குறிப்பிட்ட நிருபதுங்கனின் கல்வெட்டு ஐந்தாவது வரியில் முடிவடைகிறது.
சோழர்காலக் கல்வெட்டு:
இதனைத் தொடர்ந்தவாறு முதலாம் பராந்தக சோழனின் நான்காம் ஆட்சியாண்டு (கி.பி.911 ஆம் ஆண்டு) கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
மீதி நான்கு கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 முதல் 953 வரை) காலத்தைச் சேர்ந்தவை.
ஸ்வஸ் திஸ்ரீ கோப்பர கேசரிபன்மர்கு யாண்டு நாலாவது பனைஊர் நாட்டுச் சேந்தமங்கலத்து அவனி திலதத்து தேவற்குத் திருவிளக்குக்கு மழநாட்டுக் களத்தூருடையான்றாழி வைகுந்தனாகிய செம்பியன் காவிதி யரையன் வைத்த ஆடைஞ்நூறு.
விளக்கம்:
கோப்பரகேசரி என்னும் பட்டப்பெயர் கொண்ட பராந்தக சோழனாட்சியில் பனையூர் நாட்டைச் சார்ந்த சேந்தமங்கலத்திலுள்ள அவனிதில தத்து தேவர் (பார்சுவநாதர்) சிற்பத்தின் முன்பு விளக்கேற்றுவதற்காக மழ நாட்டினைச் சார்ந்த களத்தூர் வாசியான ஆழிவை குந்தன் என்பவர் ஐநூறு ஆடுகளைத் தானமாகக் கொடுத்துள்ளார் எனப் பொருள்படும். இவருக்குச் செம்பியன் காவிதி அரையன் என்னும் பட்டப்பெயரும் உண்டு.
அடுத்துள்ள சாசனம் பராந்தகனது 28-ம் ஆட்சியாண்டில் (பொ.யு. 935) பொறிக்கப்பட்டது.
ஸ்வஸ்திஸ்ரீ மதிரைகொண்ட கோப்பரகேசரி பந்மர்க்கு யாண்டு 28-வது பனைஊர் நாட்டுச் சேந்தமங்கலத்துப் பிடாரியார்க்குத் திருவிளக்குக்கு வில்வலத்துப்பூசலன் பகையடக்கிவைத்த ஆடெழுநூறு.
விளக்கம்:
வில்வலம் என்ற ஊரினராகிய பூசலன்பகையடக்கி என்பவர் பனையூர் நாட்டுச் சேந்தமங்கலத்திலுள்ள பிடாரியாருக்கு (பார்சுவநாதர்) திருவிளக்கு ஏற்றுவதற்காக எழுநூறு ஆடுகளைக்கொடுத்திருக்கிறார்.
கல்வெட்டு வாசகம்: 4மூன்றாவது சாசனமும் மதுரையை வெற்றிகண்ட பராந்தக சோழனது 28-வது ஆட்சியாண்டைச் (பொ.யு. 935) சார்ந்தது.
ஸ்வஸ்திஸ்ரீ மதிரைகொண்ட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு 28-வதுபனைஊர் நாட்டுச் சேந்தமங்கலத்துத் திருமணிக் கோயிற்றேவற்குத் திருவிளக்குக்கு அருமொழியாகிய வீரநாரணப் பல்லவரையன் வைச்ச ஆடறு நாறு.
விளக்கம்:
அதாவது அருண்மொழி எனப்பெயர் கொண்டவீர நாராயணர் பல்லவரையன் என்பவர் சேந்தமங்கலத்திலுள்ள திருமணிக்கோயிலில் தேவருக்கு விளக்கு ஏற்றுவதற்காக அறுநூறு ஆடுகளைத் தானமாக அளித்துள்ளார் என்பதாகும்.
நான்காவது சாசனம் பராந்தக சோழனது 33-வது ஆட்சியாண்டில் (பொயு. 940) பொறிக்கப்பட்டது.
ஸ்வஸ்திஸ்ரீ மதிரையு மீழமுங்கொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 33-வது பனையூர் நாட்டுச் சேந்தமங்கலத்துப் றேவற்குக் திருவிளக்குக்கு கிளிநல்லூர் கிழவனாகிய ஸ்வதேவனாகிய கிழான் கோன் வைச்ச ஆடைஞ்ஞூறு
இந்தக் கல்வெட்டில் பரகேசரிவர்மனாகிய பராந்தகன் மதுரையையும், ஈழத்தையும் வென்ற செய்தி இடம் பெற்றிருக்கிறது. இவனது ஆட்சிக்காலத்தில் (பொ.யு. 940) பனையூர் நாட்டைச் சார்ந்த சேந்தமங்கலத்திலுள்ள பார்சுவதேவர் முன்பு விளக்கெரிய விடுவதற்காக கிளி நல்லூரைச் சேர்ந்த ஸ்வதேவன் என்பவர் ஐநூறு ஆடுகள் கொடுத்திருக்கிறார்.
விளக்கெரிப்பதற்காகப் பல்வேறு ஊர்களைச் சார்ந்தவர்கள் தானமாக கொடுக்கப்பட்ட ஆடுகளின் மொத்த எண்ணிக்கை 3050. தமிழகத்திலுள்ள கோயில்களில் வேறெதற்கும் இவ்வளவு அதிக அளவில் ஆடுகள் தானம் வழங்கப்பட்டதில்லை. திருவிளக்கேற்ற ஆடுகள் தானம் செய்தவர்களுள் வீரநாராயணப் பல்லவரையன், ஸ்வதேவன், ஆழி வைகுந்தன் ஆகிய பெயர்கள் இந்து சமயத்தை சார்ந்த பெயர்களே.
இருவேறு அரசர்களின் இவ்விரண்டு கல்வெட்டுகளுக்கும் இடைவெளி 43 ஆண்டுகள். ஆனால் எழுத்துக்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே எழுத்தமைதியுடன் காணப்படுவது பெரும் விந்தையே!.
தவளைப் பாறை
அனைத்தையும் கண்டுவிட்டு இந்த மொத்த பொக்கிஷங்களையும் உள்ளடக்கிய குன்றுப் பகுதியினை ஒரு சுற்று சுற்றிவிட்டு வர எத்தனிக்க முதலில் இடமிருந்து வலமாக ஆரம்பித்தேன். நாற்பது அடிகளை கடப்பதற்குள் கண்ணில் பட்டது மேற்கண்டப் பாறை.ஒரு பெரிய தவளை அழகாக இந்த சமணர் படுகைகளையும், பார்சுவநாதரையும் பார்த்தவாறே அமர்ந்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
பல்வேறு தனிச்சிறப்புகளைக் கொண்ட இந்த தடம் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது ஆச்சர்யமே. இதற்கானக் காரணம் என்னவென்றும் தெரியவில்லை. கீழேயிருந்து மலைமீது வருவதற்கான கருங்கற் படிக்கட்டுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமண சமயத்தவர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இங்குத் தங்கியிருந்த சமண முனிவர்கள்தான் நாலடியாரை இயற்றிவர்கள் என்றும் மதுரையில் கழுவேற்றப்பட்டதாகக் கூறப்படும் சமணர்கள் சிலரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர் கொடுமுடி சண்முகனார் குறிப்பிடுகிறார்.
மொத்தமாக இந்த எண்ணாயிரம் மலை சமயம் கடந்த ஒன்றாகவே பார்க்கத் தோன்றுகிறது. பல்லவர்களும் , சோழர்களும் சமணர்களை சமயம் சார்ந்து நோக்காமல் மக்களின் பிணி தீர்த்த மருத்துவர்களாகவும் கல்வியினை போதித்த சான்றோர்களாகவும் எண்ணியதால் என்னவோ இந்த மலைக்கு எண்ணாயிரம் எனப் பெயர் பெற்றதாக மனதில் நினைத்துக்கொண்டே அங்கிருந்து விடைபெற்றேன்.
நன்றி பயணம் தொடரும்...
மேலும் படங்கள்



















Comments
Post a Comment