*ஜெயம்கொண்டான்*
கோடை விடுமுறையில் வரலாறு தொடர்பான குறிப்பாக கல்வெட்டுகள் தொடர்பான எனது தேடலில் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கோவில்கள் மற்றும் வரலாற்றுத் தடங்கள் ஆகியவற்றை காணும் ஆவலில் இன்று நான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் அமைந்த ஜெயம் கொண்டான் என்ற ஊருக்கு எனது இருசக்கர வாகனத்தில் பயணத்தை தொடங்கினேன். இது கோடை காலமா என்று கேள்வி எழும் அளவிற்கு காலை 10 மணி அளவில் பயணத்தை தொடங்கிய போது சில்லென்ற காற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, ஆரம்பமே அமர்க்களமாக அமைய இன்று குறைந்தது மூன்று வரலாற்று தடயங்களையாவது பார்த்தே தீர வேண்டும் எனும் ஆவல் மேலிட்டது.
நான் முதலில் ஜெயம் கொண்டான் எனும் ஊரில் அமைந்த *ஜெயம் கொண்டேஸ்வரர்* ஆலயத்திற்கு சென்றேன். ஊரின் மையத்தில் அமைந்திருந்த இக்கோவில் சுமார் 1500 வருடங்களுக்கு முற்பட்டதாக கூறுகின்றனர். ஒரு கோட்டைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டதாக இக்கோவில் ஒரு காலத்தில் திகழ்ந்தது என்பதை அதன் நுழைவாயில் கோபுரத்தையும் சுற்றுச்சுவர் அமைப்பையும் பார்த்தபோது புரிந்து கொண்டேன். தற்சமயம் ராஜகோபுரம் ஒன்று மட்டுமே வரலாற்றை பறைசாற்ற எஞ்சி உள்ளது. எனக்குத் தெரிந்து சுமார் 10 லிருந்து 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்த சுற்றுச்சுவர் மற்றும் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கொண்ட இந்த பிரம்மாண்ட கோவில் தற்சமயம் வெறும் ஒரு சென்ட் நில அளவில் மட்டுமே ஜெயங்கொண்டேஸ்வரர் ஆள்கிறார். அதுவும் பல நூறு ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடந்த இக்கோவில் ஊர் மக்களின் துணையோடு ஈசன் சன்னதி மற்றும் தாயார் சன்னதி ஆகிய இரண்டும் புனரமைக்கப்பட்டு தற்போது ஒரு கால பூஜை வழிபாட்டில் உள்ளது.
சரிசரி, வரலாற்றுக்கு போவோம், செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரிய சிவாலயங்கள் பதினொன்றில் இக்கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படும் இந்த கோவில் கடைசியாக ராஜா தேசிங்கு ஆட்சி காலம் வரையிலும் மிகவும் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. ஆற்காடு நவாபின் படையெடுப்பின் போது இக்கோவில் வீரர்களுக்கு தஞ்சம் கொடுக்கும் பாதுகாப்பு அரணாகவும் இருந்துள்ளது. அதன் காரணம் கொண்டே இக்கோவில் போரினால் இவ்வளவு பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது.
கோவிலுக்கு சோழ மன்னர்களும் அதன் பின் வந்த அரசர்களும் கடைசியாக ராஜா தேசிங்கு ஆட்சிக் காலத்திலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோவிலில் ராஜகோபுரத்தினை தாங்கும் தளத்தில் உள்ள ஒரு சிற்பம் ராஜா தேசிங்கு தனது மனைவியுடன் குதிரையில் செல்லும் அரிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு தூணில் ராவணன் சிற்பம் பத்து தலைகளுடன் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சுவர் கிட்டத்தட்ட 90 சதவீதம் சிதிலமடைந்துள்ளது. கல்வெட்டுகளை தேடிப்போன எனக்கு கொஞ்சம் வரலாறும் நிறைய ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சியது...நன்றி






Comments
Post a Comment