சத்ருமல்லேசுவரம் (தளவானூர்)

ஜெயம்கொண்டான் கோவில் முடித்து அங்கிருந்து பிரதான சாலை வழியாக செல்லாமல் ஜம்போதி மற்றும் திருவம்பட்டு வழியாக தளவானூர் செல்ல ஆயத்தமானேன். காலையில் தென்பட்ட மேகக்கூட்டம் தற்போது மேலும் கரு மேகமாய் திரண்டது. எதுவாகினும் தளவானூர் சென்று பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் இரு சக்கர வாகனத்தின் வேகத்தை கூட்டினேன். வழி நெடுகிலும் இருபுறமும் கற்பாறைகளை அடுக்கி வைத்தார் போல் ஆங்காங்கே குன்றுகள் தென்படத் துவங்கியது. சரியாக 11 கிலோமீட்டர் தொலைவில் நான் அடைய வேண்டிய ஊர் இருந்தது. 

  கூகுள் வரைபடத்தில் கோவிலை அடைய வழி கேட்டபோது அது வயல் வெளி வழியாகவே ஒற்றையடி பாதையில் செல்லுமாறு எனக்கு வழிகாட்டியது. சரி ஒரு கை பார்த்து விடுவோம் என்று வயலை ஒட்டிய ஒற்றையடி பாதையில் வாகனத்தை செலுத்தினேன். கோவிலை அடைய சுமார் 500 மீட்டர் தொலைவு இருக்கும் அதற்கு மேல் என்னால் வாகனத்தை செலுத்த முடியவில்லை. வயல்வெளி ஓரமாகவே வாகனத்தை நிறுத்திவிட்டு கால்நடையாக கோவிலை அடைந்தேன்.பொதுவாக இது போன்ற புராதன கோவில்களில் பெரும்பாலும் ஆள், அரவம் நடமாட்டம் இருக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே அரவம் இருக்கிறதோ? இல்லையோ? ஆனால் ஆள் யாரும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

  தளவானூர் குடைவரை அமைந்துள்ள குன்று

இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலின் நுழைவாயிலின் முன்பு பல்லவர்கள் மற்றும் முற்கால சோழர்களின் போர் தெய்வமான ஜேஷ்டா தேவி ('ஜேஷ்டா' என்றால் 'மூத்தவள்' 'பழையோள்' ) கம்பீரமாக நின்று என்னை வரவேற்றாள்.

         
                      ஜேஷ்டா தேவி 

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இன்றி 1400 வருட பொக்கிஷத்தின் இன்றைய நிலவரம் இதுவே. இரும்பு வேலியின் தாழ்ப்பாளைத் திறந்து கொண்டு ஜேஷ்டா தேவி கொடுத்த தைரியத்தின் பேரில் உள்நுழைந்தேன்.

                   சத்ருமல்லேசுவரம்

 முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் (ஆட்சி காலம் கிபி 590-630) எடுப்பித்த ஏழு குடைரைக் கோயில்களில் இதுவும் ஒன்று. 'சத்ருமல்லன்' என்பது அவனது பட்டப்பெயர்களில் ஒன்று. மண்டகப்பட்டில் தொடங்கிய மகேந்திரவர்மனின் கலைத் தாகம் மென்மேலும் மெருகூட்டப்பட்ட இடம் இந்த தளவானூர் என்றால் மிகையாகாது.

.                  வாயிற்காவலர்கள்

மேற்குக் குடைவரைக் காவலர் திரிபங்க நிலையில் வலது கையை இடையில் வைத்து, இடது கையை உயர்த்தி போற்றி முத்திரை காட்டுகிறார். இடது பாதம் நேராக நோக்க வலது பாதம் பக்கமாக நோக்குகிறது, காலில் அணிகள் இல்லை.

கிழக்குக் குடைவரைக் காவலர் கதையின் மீது வலது அக்குளை வைத்து அந்தக் கையை தொங்கப் போட்டுள்ளார். இடது கை தொடை மீது உள்ளது. வலது குதிகால் உயர்ந்துள்ளது.

குடைவரைகளில் முதல் முயற்சியாக பாதபந்தம், மகரத் தோரண வாயில், கபோதம், பூமிதேசம் ஆகியன கொண்டு முழுமை அடைந்த முகப்பு தோற்றம் மற்றும் கிழக்கு முகமாக கருவறை அமைக்கும் பொருட்டு பக்கச்சுவரில் கருவறை, அர்த்தமண்டபம் என பல்லவனின் ஆகச் சிறந்த படைப்பாக இக்குடைவரை அமைந்துள்ளது.

          அர்த்த மண்டபம் & கருவறை

இதன் தரை முக மண்டபத்தின் தரையை விட நன்கு உயர்ந்துள்ளது. தூண்களுக்கிடையில் உள்ள தரை மேலும் சிறிது உயர்ந்துள்ளது. முன்னே ஒரு அரைவட்டப் படி (சந்திரக்கல்).முன்னே இரு முழுத்தூண்கள். அவற்றின் கீழ்ப்பகுதிகள் சதுரமாகவும் நீண்ட மேல்பகுதிகள் எண்முகமாகவும் உள்ளன, அவை நான்முக போதிகைகள் தாங்குகின்றன. பின்புறம் இரு தூண்களின் மேல் முழுவதும் சதுரமாக உள்ள இரு அரைத்தூண்கள். அவை மூன்று முக போதிகைகள் தாங்குகின்றன. அவற்றின் மேல் உத்திரமும், அதன் மேல் வாஜனமும், அதன் மேல் கபோதமும் உள்ளன. 

அனைத்தையும் கடந்து கருவறையில் எம்பெருமானை கண்ட தருணம் என்னில் ஏதோ இனம் புரியாத பயம் கலந்த பரவசத்தில் ஆழ்த்தியது. மங்கிய விளக்கு வெளிச்சத்தில் பல்லவ மன்னர்களும் பாண்டியர்களும்,சோழர்களும் நின்ற அதே இடத்தினில் நின்று பார்த்து பரவசப்பட தனியொருவனாக எனக்கு கிட்டியது என் பெரும் பாக்கியமே.பெரிய ஆவுடையார் உடன் லிங்க பாணம் உள்ளது,ஆனால் அது தாய்ப் பாறையில் செதுக்கப் பட்டதல்ல.

இனி வந்த வேலையைப் பார்ப்போம் என ஆராய முயன்ற போது கண்ணில் எளிதாக மூன்றும் சற்று உற்றுநோக்க ஒன்றும் என மொத்தமாக நான்கு கல்வெட்டுகள் தென்பட்டன.முதல் கல்வெட்டு-மகேந்திரன் கல்வெட்டு கிரந்த மொழியில் அமைந்த கல்வெட்டு இதுவாகும். (மேற்கு அரைத் தூணின் மேல் பகுதியில் வாயிற்காவலர் கோட்டத்தை அடுத்து உள்ளது).

          
                 கல்வெட்டுத் தொகுப்பு

"குன்றின் மீதுள்ள சத்ருமல்லேசுவராலயம் எனும் இக்குடைவரைக் கோயில் தம் படைவலிமையால் அரசர்களை எளியவர்களாக்கிய நரேந்திரனான சத்ருமல்லன் உருவாக்கியது."

           
                     தமிழ் கல்வெட்டு

 அர்த்த மண்டபத்தின் தென்முழுத்தூணின் சதுரத்தில் கிழக்கு நோக்கிய கல்வெட்டு

 "தொண்டையந்தார் வேந்தன் நரேந்திரப் போத்தரையன் வெண்பேட்டின் தென்பால் சரம் மிக்க வெஞ்சிலையான அரனுக்கு சத்ருமல்லேசுவராலயம் எனும் இடம் அமைத்தான்"
              
                    தென்புறக் கல்வெட்டு

 "இவ்வூர் பிரம்ம மங்கலவன் செல்வன் சிவதாசன் சொல்லியது"

              நந்திவர்மர் கால கல்வெட்டு

கிழக்கு அரைத்தூணின் மேற்கு முகத்தில் உள்ள கல்வெட்டு, இக்கோயிலுக்கு செய்யப்பட்ட அறச்செயல் ஒன்றைக் கூறுகிறது.

ஆக வந்த வேலை முடிந்தது என மகிழ்திருந்த தருணம் கூகுள் வரைபடத்தில் தளவானூரைத் தேடுகையில் அதே இடத்தில் மேலும் ஓர் வரலாற்றுப் பொக்கிஷம் இருப்பது சட்டென நினைவுக்கு வர சரி அது எங்கு இருக்கிறது என்று கூகுளில் தேட தலையே சுற்றும் அளவிற்கு என்னைக் குழப்பியது.அதனூடே சாரல் மழையும் தூவ ஆரம்பிக்கையில் அடுத்த தேடல் மனதில் ஓட சரி அதையும் பார்த்துவிடும் எண்ணம் மேலிட்டது.

தேடல் தொடரும்...

மேலும் படங்கள்


நன்றி...







Comments

Popular posts from this blog

எண்ணாயிரம் மலை