சமணர் படுகை - தளவானூர்
சமணர் படுகை - தளவானூர்
கூகுள் வரைபடத்தில் அக்குறிப்பிட்ட இடம் நான் நிற்கும் இந்த தளவானூர் குடைவரைக் கோவிலிலிருந்து சில மீட்டர்கள் தூரமே காட்டியது. சரி வரைபடத்தில் நடந்து செல்லும் வழித்தடத்தினை தேர்வு செய்து நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு பத்து அடிகள் எடுத்து வைக்க முற்படும் போதெல்லாம் வலது பக்கம் திரும்பு, இடது பக்கம் திரும்பு என என்னைக் குழப்பியது. கிட்டத்தட்ட அந்த இடத்திற்கு அருகில் தான் நான் இருக்கிறேன் என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. இருந்தும் தடத்தினைக் கண்டுபிடிக்க இயலாமல் சற்றே குழம்பிப் போனேன். இனி கூகுள் வரைபடம் உதவாது என்று அதை அனைத்து விட்டு சுற்றும் முற்றும் கவனிக்க தொடங்கினேன்.
வயல்வெளிக்குச் செல்லும் ஓர் ஒற்றியடிப்பாதை கண்ணில் புலப்படவே அதை பின் தொடர்ந்தேன். அது என்னை வயல்வெளிக்கு மட்டுமே இட்டுச் சென்றது. மறுபடியும் துவங்கிய இடத்திற்கு வந்து நின்றேன். மீண்டும் உற்று நோக்கத் தொடங்கியதும் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் சிறு வெளிச்சம் கண்ணில் பட்டது சரி என்று அதைக் காண அருகில் நெருங்கினேன். அருகில் நெருங்கியதும் அது இரண்டு பாறைகள் மட்டுமன்று ஆய்த எழுத்தினை போல மூன்றாவது பாறை மண்ணில் பாதி புதைந்தும் மீதிப்பாறை மேல் துருத்தியும் இருந்தது.
காலணியோடு பாறையில் ஏற முயன்றேன் இரண்டு முறை வழுக்கி விட்டது சரி காலணிகளை கழட்டி பாறையின் மீது வைத்து விட்டு மீண்டும் முயற்சி செய்தேன். ஒரு வழியாக சுமார் மூன்று அடி உயரம் கொண்ட அந்தப் பாறையின் மீது ஏற ஆச்சரியம் மேலிட்டது. நான் தேடி வந்த இடத்திற்கு செல்லும் வழி அங்கு இருந்தது. வழக்கமாக சமணப் படுகைகளுக்கு செல்லும் பாதை பாறையில் சமகாலத்தில் பயன்படுத்தும் படிகளைப் போன்று வெட்டப்பட்டு இருக்கும் ஆனால் அங்கு இரண்டு கைகளை மட்டும் ஊன்றும் அளவிற்கு மட்டுமே படிகள் பாறையில் வெட்டப்பட்டிருந்தது.
சரி என கைகளை ஊன்றிப் பாறையின் மீது ஏறத் தொடங்கினேன். முதல் 10 அடிகள் சற்று கடினமாக இருந்தாலும் அடுத்தடுத்த படிகளை எளிதாகவே ஏற பழகிக் கொண்டேன். லேசாக தூரிக் கொண்டிருந்த வானம் திடீரென மின்னல் வெட்டுகளை சரமாரியாக வீசத் தொடங்கியது. மின்னல்கள் சற்று பீதியைக் கிளப்பினாலும் அங்கிருந்த ஒரு பெரிய பாறையின் கீழே தஞ்சம் புகுந்தேன்.
ஒரு சில மணித்துளிகளில் அவ்விடத்தில் இருந்து நகர்ந்து சமணர் கல் படுக்கை இருக்கும் இடத்தினை தேடத் துவங்கினேன். நான் அமர்ந்த அந்த பெரிய பாறையின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு அதை ஒட்டியவாறே மெதுவாக சென்றேன். இந்தப் பெரும்பாறையின் மீது மற்றொரு பெரிய பாறை முட்டுக்கொடுத்து இருப்பது போன்ற அமைப்பு ஒன்றினைக் கண்டேன். அந்த இரு பெரும் பாறைகளுக்கு இடையில் ஒரு ஆள் நுழைந்து செல்லும் அளவிற்கு ஒரு வழித்தடம் இருந்தது. பாறைகளை உற்று நோக்கியவாறு அதனுள் நுழைந்து வெளிச்சம் பீறிடும் இடத்தினை நோக்கி வேகம் எடுத்தேன்.
ஒரு வழியாக நான் தேடி வந்த தடத்தினை அடைந்தேன். சற்றே என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவ்விடத்தினை பார்வையிட்டேன். அது சமயம் சாரல், மழையாக மாற சட்டென நானும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அகிம்சை (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை), சத்தியம் (வாய்மை), அஸ்தேயம் (களவாமை), பிரம்மச்சரியம், மற்றும் அபரிக்கிரகம் (பற்றின்மை) ஆகிய ஐந்து முக்கிய உறுதிமொழிகளைக் கடைப்பிடித்து தம் இறுதிக் காலத்தை கழித்த சமணர்களின் இடத்தில் தஞ்சம் அடைந்தேன்.
சிறிது நேரத்தில் மழை வேகம் பிடிக்கவே செய்வதறியாது அங்கேயே உட்கார்ந்து கொண்டு மழையை ரசிக்கத் தொடங்கினேன்.ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை.அபரிக்கிரகம் பற்றிய எண்ணமே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.ஒரு பொருளின் மீதோ, நபரின் மீதோ அல்லது உணர்ச்சியின் மீதோ அளவுக்கு மிஞ்சிய ஆசை அல்லது சொந்தம் பாராட்டுதல் இல்லாமல் இருப்பதற்கு எவ்வளவு மனவலிமை தேவை. தேவைக்கேற்ற வாழ்வு: ஆடம்பரங்களைத் தவிர்த்து, உயிர்வாழத் தேவையானதை மட்டும் வைத்துக்கொள்ளுதல்.மன உறுதி: ஒரு பொருள் நம்மிடம் வரும்போது மகிழ்ச்சியடையாமலும், அது நம்மை விட்டுப் போகும்போது வருத்தப்படாமலும் இருக்கும் சமநிலை.சுயநலமின்மை: "எனது", "என்னுடையது" என்கிற அகந்தையை விட்டொழித்தல்.எளிமை: பொருட்கள் சேர்க்கும் ஆசையைக் குறைப்பதன் மூலம் மன அமைதி பெறுதல்.இவ்வளவு விசயங்கள் இருக்க ஆடைகளை துறந்த அம்மண சாமியார் எனும் பெயரில் அவர்களை மேலோட்டமாக பார்க்கும் பார்வை நமது அறியாமையின் வெளிப்பாடே என்று மூழ்கிய தருணம் பாறையின் மேற்புறம் வழிந்த மழைநீர் நான் அமர்ந்திருந்த பகுதியினை ஒட்டி ஒரு சிறு ஓடைபோல என்னைக் கடந்து சென்றது.
மழை வரும் முன்னமே எடுத்த படம்ஒரு சிறுதுளி கூட என்னை நெருங்கவில்லை.மழையும் அதனூடே வீசிய மழைகாற்றும் என்னை அவ்விடம் விட்டு அகலாது அங்கேயே கட்டிபோட்டது. மழை விட்டால் கிளம்பலாம் என்று எனது இருப்பை அங்கிருந்து புறப்பட மனம் இல்லாமல் மழைமீது பழிபோடச் சொன்னது.பத்து பதினைந்து நிமிடங்கள் என்னையும் ஒரு துறவியாக உணரவைத்து, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்னை காலப் பயணம் மேற்கொள்ளச் செய்த அந்த நிமிடம் எனது அலைபேசி ஒலிக்கத் தொடங்கியதும் காலப் பயணம் பாதியிலேயே நின்று போனது.கடந்த 20 நிமிடங்களாக முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.எங்குதான் இருக்கிறாய்? என்ற குரல் மனைவியிடமிருந்து அவ்வளவுதான் கடைசி நேரத்தில் ரயிலைத் தவறவிட்ட பயணிபோல அங்கிருந்து அகலத் தயாரானேன்.
கடகடவென மேலிருந்து கீழே இறங்கி வந்தேன்.கீழே இறங்கியதும் ஒன்று புலப்பட்டது. மகேந்திரவர்ம பல்லவன் ஆரம்ப காலத்தில் சமண மதத்தை பின்பற்றியவன் என்பதும் அதன் பிறகே சைவ சமயம் பின்பற்றினான் என்பதும்.இருந்தும் அவன் சமணம் மீது கொண்டிருந்த நீக்க முடியாத பற்றுதலே சமணர்கள் வாழ்ந்த அதே மலையில் அதே பாறையின் கீழ்ப் பகுதியிலே குடைவரை அமைத்தது வரை ஒப்பு நோக்கும்போது பற்றற்ற தன்மையினை பின்பற்ற இயலாத காரணம் கொண்டே அவன் சமயம் மாறினான் போல....அவனுக்கே அந்த நிலை எனும் போது நாமெல்லாம் எங்கே ? என்று மனதில் மட்டுமல்லாது வாய்திறந்தே (யாரும் இல்லாத காரணத்தால்) சிரித்துக் கொண்டே அங்கிருந்து விடைபெற்றேன்.
நன்றி...(தளவானூர் பயணம் முற்று பெற்றது).
மேலும் படங்கள்











Comments
Post a Comment