சங்ககால கோவில்-சமணர் கற்படுகைகள் கொண்ட சிவகிரி மலை

 

                          சிவகிரி மலை

 பழைமை வாய்ந்த சமணர் படுக்கைகள் மற்றும் குகைகளைக் கொண்டுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மலை என்பதைக் கேள்விப்பட்டு அப்படி என்னதான் இருக்கிறது பார்த்துவிடும் ஆவலில் எனது தேடல் தொடங்கியது.சூரியன் சுட்டெரிக்கும் வெயிலில் காலை 10 மணியளவில் புலிவந்தி எனும் ஊருக்குக் கிளம்பினேன்.கிளம்பும் போதே மனைவி மதிய உணவிற்கு வந்து விடுவீர்களா? என்று கேள்வி எழுப்பியபோதே எனக்கு அளிக்கப்பட்ட நேரம் மொத்தமாக மூன்று மணி நேரம் மட்டுமே எனப் புரிந்துகொண்டேன்.எனது ஊரிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்திருப்பதால் இருசக்கர வாகனத்தில் ஒரு மணிநேரம் பயணிக்க  சரியாக 11.00 மணியளவில்  விழுப்புரம் மாவட்டம்   செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள புலிவந்தி கிராமத்திற்கு அருகில் மலையைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, வனப்பகுதியாகப் பாதுகாக்கப்பட்டு வரும் அமைதியான மற்றும் இயற்கையான சூழலைக் கொண்ட சிவகிரி மலையை அடைந்தேன்.வழக்கம் போலவே இந்த மலையும் வனப்பகுதிக்குள் அமைந்திருந்தாலும் ஒற்றையடிப் பாதை நன்றாகவே மலையை அடைய வழிகாட்டியது.

விநாயகர்

  நேராக கோவிலின் அடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மலையேற்றம் தொடங்கினேன். ஆரம்பமே அமர்க்களமாக வில்வ மரத்தடியில் விநாயகர் வெற்றியோடு திரும்பு என வாழ்த்து கூற, இவ்வளவு வெயிலின் கொடுமையை அனுபவித்து நான் வந்திருக்க நம்ம சகோ வில்வ மரத்தினடியில் குளுகுளுவென அமர்ந்திருந்தது அவரின் ஒன்றுவிட்ட தம்பியான எனக்கு சற்று கடுப்பினை கிளப்பியது.மீதியை வந்து பேசிக்கொள்கிறேன் என்று மனதில் நினைத்தவாறே நகர இரண்டு வழிகள் கண்களில் பட்டன.நமக்கு எப்பவுமே சாகச வழிதானே பிடிக்கும் என சமகாலப் படிகளைத் தவிர்த்து சமணர்காலப் படிகளைத் தேர்ந்தெடுத்தேன்.

                  பாறைப் படிக்கட்டுகள்

   பாறைச்சரிவில் மிகவும் நேர்த்தியாக வெட்டப்பட்ட படிகளை ஒவ்வொன்றாக கடக்க  என்னில் தோன்றிய பயணக் களைப்பு நீங்கி உற்சாகம் மேலிட்டது. மேலே என்ன இருக்கிறது என்பதை மறந்து படிகளை ரசித்தவாறே மலையேற்றம் நிகழ்ந்தது. ஒருவழியாக குன்றின் உச்சியினை அடைந்தேன்.

சங்ககால கட்டுமானம்

 குன்றின் மீது ஏறியதும் முதலில் என் கண்களில் பட்டது ஒரு செங்கல் கட்டுமானம். அதை நெருங்கி பார்க்கையில் தற்காலத்து செங்கற்களைப் போல் அல்லாது அளவிலும் பெரியதாகவும் கனமானதாகவும் இருந்தது. மேலும் செங்கற்களுக்கிடையே வெறும் மண்ணால் ஆன சாந்து மட்டுமே இடப்பட்டிருந்தது. இச்செங்கற்களை உற்று நோக்க கடந்த ஜனவரி மாதம் பாண்டிச்சேரியில் உள்ள  அரிக்கமேடு எனும் பகுதியில் கண்ட அதே கட்டிட அமைப்பு மற்றும் செங்கல் அமைப்பைக் கொண்டிருந்தது. அநேகமாக, இது கடைச்சங்க காலத்தை சேர்ந்த கட்டுமானமாக இருக்கலாம் என்ற அனுமானம் எனக்குள் எழுந்தது.சற்று புதர் மண்டிக் கிடந்தாலும் அவற்றை விளக்கி விட்டு உள் நுழைந்தேன். கருவறை மற்றும் அர்த்தமண்டபம் இரண்டு அமைப்புகள் மட்டுமே இருந்தன. கருவறையில் இருந்த தெய்வம் யாதென அறிய இயலவில்லை.

 பின் அங்கிருந்து விலகி , இரு பெரும் பாறைகளுக்கு இடையில் அமைந்த ஒரு வழி பாதையில் உட்புகுந்து நடக்கலானேன்.அங்கே குறிப்பிடும்படி  சமணர் வாழ்ந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை அறிந்து கொண்டேன். பிறகு எதற்கு குன்றினை அடைய இவ்வளவு அழகாக படிகளை வெட்டுவித்தனர் என்ற ஐயம் தோன்றியது.

 பாறைக்குளம்

 மேலே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு  கீழிறங்க தொடங்கினேன்.இறங்கிவரும் பாதையின் வலது புறத்தில் ஒரு சுண்ணாம்பு பூசப்பட்ட செங்கல் கட்டுமான சுவர் ஒன்று கண்களில் பட்டது.பார்த்துவிட அருகில் சென்றேன். வட்ட வடிவில் உட்புறக் குழியாக பொங்கல் பானையில் பொங்கலை அகப்பை கொண்டு வழித்தெடுத்ததைப் போல் அழகான மற்றும் தெள்ளத் தெளிய நீர் கொண்ட சிறிய குளம் இருந்தது. அநேகமாக இது பாறையில் இருந்து வழிந்து வந்த மழை நீரின் சேகரமென்றே நினைக்கிறேன்.சுற்றிலும் இலைகள் பாதுகாப்பு அளிக்க நடுவிலே ஆம்பல் ஒன்று பூத்திருந்தது. நீரின் அடியில் சிறு சிறு மீன்கள் அழகாக நீந்துவது கண்களுக்கு நன்றாக புலப்படும் அளவிற்கு நீர் அவ்வளவு தெளிவாக இருந்தது.

சிவகிரிநாதர்

 பாறைக்குளத்தினை கடந்து சமகால படிகளை அடையும் முன்னர் இரண்டு தனித்தனி பிரகாரங்கள் கண்களில் பட்டது. ஒன்று சிவனுக்கும் மற்றொன்று முருகனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டு பிரகாரங்களும் குன்றின் அடிப்பாகத்தில் மேலே இருந்து கீழாக ஒற்றைச் சுவரினை கொண்டு மறைக்கப்பட்டு கோவில்களாக தடுக்கப்பட்டுள்ளது.மூன்றாவதாக ஒன்றும் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது. அலைபேசியில் வெளிச்சத்தில் வெளியில் இருந்தவாறு நோக்க அந்த உச்சி வெயிலிலும் எதுவும் என் கண்களுக்கு புலப்படவில்லை, சரி அநேகமாக இங்கே எதுவும் இல்லை என்று அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானேன். 

                     நீர்வடி விளிம்புகள்

  அச்சமயம் திடீரென மந்திகள் ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்டு அந்தக் குன்றினை ஒட்டிய ஒரு பெரிய மரத்தின் கிளைகளை பார்த்தவாறே இவ்வளவு வெயிலில் வந்தும் சமணப் படுகைகள் எதுவும் கண்ணில் அகப்படவில்லையே என்று சோர்ந்திருந்தபோது சட்டென ஒரு மந்தி மரத்தின் கிளைலிருந்து பாறையின் மீது குதித்தது. அந்தப் பாறையின் சரிவில் மூன்று நீர்வடி விளிம்புகள் வெட்டப்பட்டு இருந்தது என் கண்களில் பட்டது. இந்த நீர்வடி விளிம்புகள் நிச்சயமாக சமணப்படுகைகளுக்கு மேலாகத்தான் கண்டிப்பாக வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அக்கணம் அந்த மந்திக்கு நன்றி கூறிவிட்டு மீண்டும் அந்த கடைசி பிரகாரத்தின் இரும்பு கதவு இடுக்கில் அலைபேசியில் வெளிச்சத்தை மீண்டும் பாய்ச்சினேன்.

                    சமணர் படுகைகள் 

 அது சமயம் இரண்டு அடுக்குகளாக சமணர் படுகைகள் கண்களில் பட்டன. மேலடுக்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஆறும் மேலடுக்கை ஒட்டி சற்று தாழ்ந்திருந்த மற்றும் ஒரு அடுக்கில் நெருக்கமாக ஐந்து படுகைகள் செதுக்கப்பட்டிருந்தன. எனது கண்களுக்கு அகப்பட்ட அந்த படுகைகள் அலைபேசியின் கண்களுக்கு முழுமையாக அகப்படவில்லை. 

சகோவிற்கு நன்றி

 கல்வெட்டுகள் எதுவும் கண்ணில் படவில்லை இருந்தும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர் வாழ்விடங்களையும் சிவனையும் அவரது மகனையும் பார்த்த திருப்தியில் அலைபேசியில் நேரத்தை பார்க்க சரியாக நண்பகல்  12.20 இப்போது கிளம்பினால் தான் 1.30 குள் வீடு அடைய முடியும் என்று சரசரவென்று  கீழே இறங்கினேன். மீண்டும் சகோவிடம் சென்று இத்தகைய வரலாற்று தடத்தினை தங்குதடையின்றி காண வாய்ப்பு அளித்ததற்கு நன்றி கூறிவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

மேலும் படங்கள் 





நன்றி...

Comments

Popular posts from this blog

எண்ணாயிரம் மலை