பல்லவர்களின் "முயன்று தவறிக் கற்றல்".


பண்டைய தமிழக வரலாறு என்றாலே சேர,சோழ,பாண்டியர்கள் என்று பள்ளிக்கூடம் சென்ற நாட்கள் முதல் இன்றுவரை தொன்றுதொட்டு பேசியும் படித்தும் வருகிற  பலகோடி தமிழர்களில் நானும் ஒருவன்.தொடக்கப்பள்ளி ஆசிரியரான எனக்குள் நெடுநாள் அவா வரலாற்றுப் புத்தகம் படிக்க. ஆம் கொரோனா காலத்தில் வீட்டோடு அடைந்து வாழ்கின்ற சூழலில் அலைபேசி சுழலில் சிக்கிய கோடான கோடி மனிதர்களுள் நானும் ஒருவன். முகநூல், கட்செவி போன்றவை சலித்துப்போனது, இருந்தும் எல்லோரும் அலைபேசியை நோண்டுவது போல நானும் அலைபேசி வாயிலாக மின்னூல் படிக்க இணையத்தை தேடினேன்.ஏகப்பட்ட நூல்கள் வரிசை கட்டி நிற்க, சரி அன்று பள்ளிப்பருவத்தில் நான் பாடம் கற்கத் தொடங்கியது முதல் இன்று பாடம் நடத்தும் வகுப்பறை வரை சேர, சோழ, பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்டதாக படித்தோமே, கற்பிக்கிறோமே  சரி அவர்கள் எப்படித்தான் ஆண்டார்கள், என்னதான் செய்தார்கள் என்பதை கொஞ்சம் விரிவாகத்தான் படித்துப் பார்ப்போமே என்ற எண்ணம் தோன்றியது. சேரர்களை  முதலில் படிப்போம் என்றுதேட  சோழர்களும், பாண்டியர்களுமே மிகுதியாக பரிட்சயமானார்கள்.அவர்களைப் படிக்கும்போதே  சேரர்கள் பற்றிய வரலாற்றில் சிறிதளவே தமிழகம் சார்ந்த இடங்கள் குறிப்பாக நீலகிரி, கன்னியாகுமரி மாவட்ட குறிப்புகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் எனது சொந்த  மாவட்டமான திருவண்ணாமலையை சுற்றிலும் உள்ள விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகியவை பல்லவர்களை  அறிமுகம் செய்து வைத்தது எனக்கு. இது என்னடா புதிர் என்று சரி அப்படி என்னதான் பல்லவர்கள் சாதனை செய்துவிட்டனர் என்று மனதிற்குள் எப்படியும் மாமல்லபுரம் பற்றியும் , காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பற்றித்தானே இருக்கப்போகிறது (எனது தெளிவு அவ்வளவே) என்று அவர்களின் வரலாற்றை படிக்க நூல்களை இணையத்தில் தேடியபோது மருத்துவர் மா.இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு எனும் நூல் கிடைக்க, நூலை அலைபேசி வாயிலாகவே படிக்கப் படிக்க என்னை அப்படியே பல்லவர்கள் வாழ்ந்த கால கட்டத்திற்கே அழைத்துச்சென்று அவர்களை முழுவதுமாய் அறிய வைத்தார் நூலாசிரியர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் அருகருகே அமைந்துள்ள குடைவரை கோவில்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. சரி,நேரில் பார்த்து ஒரு முடிவிற்கு வருவோம் என்று சென்று பார்த்ததும் இதுநாள் வரையிலும் நான் தவறவிட்ட எனது மண்ணின் மகத்துவமும்,வரலாற்றுச் சிறப்புகளையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்கு நூலாசிரியர் இராசமாணிக்கனார் அவர்களுக்கு என்றென்றும் எந்தன் நன்றியை உரித்தாக்குகிறேன்.


குடைவரை நாயகன்...

  என்னடா இது தலைப்பு ஒன்றாக, பேசுவது ஒன்றாக இருக்கிறதே என்ற எண்ணம் மேலிடும் முன்னமே, தலைப்பிற்குள் போய்விடுகிறேன். பல்லவர்கள் கைவண்ணம் என்று கூற விழையும் முன்னமே, வாசகர் மனதில் நிச்சயம் மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் கண்முன் காட்சிகளாக வந்து நிற்கும் அளவிற்கு மல்லை கடற்கரை கோயில்கள் நம் நெஞ்சினில் நீங்கா இடம்பெற்று உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பாறைகளை குடைந்தும் , செதுக்கியும் செய்ய  எப்படி யோசனை வந்தது எப்படி இவ்வளவு நுணுக்கமாக வடித்தார்கள் என பற்பல கேள்விகள் எழுந்தன. எடுத்த எடுப்பிலேயே எப்படி இவ்வளவு அற்புதமாக இவர்களால் சாதிக்க முடிந்தது. ஆம்,அவர்களும் முயன்று தவறிக் கற்ற பின்னரே தான் அத்தகைய சாதனைகளை மல்லை கடற்கரை மீதினில் கொண்டு வர முடிந்தது. பல்லவ மன்னன் மகேந்திர வர்ம பல்லவன் (காலம் பொ.ஆ 615-630) காலத்தில் தான் முதன் முதலாக  இத்தகைய அற்புதங்கள் நிகழத் தொடங்கியது. இவனின் ஆட்சிக் காலத்தில் சமண மதத்தில் இருந்து(பொ.ஆ - 620) இல் சைவ மதத்தின் பால் ஈர்ப்பு கொண்டவனாய் தன்னை அர்பணித்துகொண்டு சைவம் வளர்க்கலானான். அதுவும் ஒரு தசாப்த நூற்றாண்டுகள் கடந்தும் அவனது செய்கை இன்றும் பார்க்கப் பார்க்க கண்களுக்கு விருந்து படைக்கும் கல்லமுதம் என்றால் அது மிகையாகாது.

குடைவரைக் கோவில்களின் தோற்றுவாய் ...

   வழக்கமாக கல், மரம், உலோகம், சுண்ணாம்பு இவற்றைக்கொண்டு மட்டுமே கோவில்கள் எழுப்பப்பட்டு வந்த காலகட்டத்தில் இவற்றைத் தாண்டி வேறொரு எண்ணம் தோன்றியதோ என்னவோ முற்றிலும் மாறுபட்டு சிந்தித்தவனாக இன்றைய விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு எனும் ஊரில் உள்ள பெரிய பாறை அமைப்பில் இருந்த சிறுகுன்றை தேர்வுசெய்து அதனை குடைவித்து   மும்மூர்த்திகளுக்காக முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் தந்தையான மகேந்திரவர்ம பல்லவன் எழுப்பிய முதல் குடைவரை  கோவிலே மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு முன்னோடி என்பது நம்மில் எத்துணை பேருக்கு தெரியும். ஒன்றல்ல இரண்டல்ல விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொடங்கி விழுப்புரம்  வரையிலான ஊர்களில் எத்துணை எத்துணை குடைவரை கோவில்களை குடைவித்தும், அதில் முயன்றும் தவறியும் சிறப்பாக குடைவித்தும் கற்றுத் தேர்ந்து அல்லவோ மல்லையில் இன்று நாம் நாட்டினர் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள சுற்றுலா விரும்பிகள் அனைவரையும் ஈர்ப்பதோடு ஒவ்வொரு நாளும் காண்பவர் பூரித்து மகிழும் எழில் கொஞ்சும் கல்லிலே கலைவண்ணம் கண்டனர்  பல்லவர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே மண்டகப்பட்டு, தளவானூர், பனமலை, சிங்கவரம், மேலச்சேரி, சீயமங்கலம் (தற்போது திருவண்ணாமலை மாவட்டம்) போன்ற எண்ணற்ற ஊர்களில் இன்றும் பல்லவர்களின் கைவண்ணதைக் காண கண்கோடி வேண்டுமே.

பல்லவர்கள் மலையினைக் குடைவித்து செய்த கோவில்கள்...

    மண்டகப்பட்டில் தொடங்கிய அவரது கலைத்தாகம் அடுத்து தளவானூர் சென்று இன்னும் மெருகேற்றப்பட்டது. அங்கு அவர் குடைவித்த சத்ருமல்லேஸ்வரர் குடைவரை இன்றும் ஒரு கால பூசையுடன் எம்பெருமானை கைக்கெட்டும் தூரத்தில் பார்த்துப் பார்த்து பரவசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் நிச்சயம் நாமறியாது நமது விழி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 இன்னும் ஒருபடி மேல்சென்று சிங்கவரம் அருகில் உள்ள மேலச்சேரி எனும் ஊரில் அமைந்துள்ள சிகாரி-பல்லவேஸ்வரர் கோவிலுக்கு சென்றால் பிரமிப்பின் எல்லைக்கே சென்று நம்மை கொண்டு சேர்க்கும் வண்ணம் எம்பெருமானின் லிங்க வடிவம் மற்றும் ஆவுடை இரண்டும் தாய்ப்பாறையிலேயே  குடைவித்து தங்களின் கட்டடக்கலையை பறை சாற்றியிருப்பர் பல்லவர்கள். தாயார்  பிரிஹந்நாயகி சிற்பம் அவ்வளவு தத்ரூபமாக  கலைநுணுக்கத்துடன் வடித்து இருக்கிறார்கள்.

மேலச்சேரியிலிருந்து சரியாக 30 கி.மீ  தொலைவில் திருவண்ணாமலை மாவட்டம் சீயமங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ள மற்றுமொரு குடைவரை அவனி பாஜன பல்லவேஸ்வரநாதர் குடைவரை மேலுமொரு வரலாற்று சிறப்புமிக்க பல்லவர் குடைவித்த தலமாகும் இங்குதான் தென்னிந்தியாவின் முதல் நடராஜர் புடைப்புச் சிற்பம் முன்மண்டபத் தூணில் குடையப்பட்டு அதில் ஆனந்த தாண்டவம் புரிகிறார் நடராஜர். 

பல்லவர்கள் மலைமீது அமைத்த முதல் குடைவரைக் கோவில்...

   செஞ்சியை  அடுத்த சிங்கவரத்தில் மலைமீது குடைவித்த குடைவரைக் கோவில் ரங்கநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும் நெடிந்துயர்ந்த மலையில் சரிசமமாய் பகிர்ந்தெடுத்து நேர்த்தியாக குடைந்து நம் கண்முன்னே பாற்கடலில் பள்ளிகொண்ட எம்பெருமானையும் ரங்கநாயகித் தாயாரையும் காண்பவர் மனதினை சொக்கிப்போக வைக்கும் அற்புத வடிவமைப்பு கொண்டது இந்தக் குடைவரையில் இருப்பவர் ஶ்ரீரங்கம் ரங்கநாதரை விட அளவில் பெரியவர்.

பல்லவர்கள் மலைமீது அமைத்த முதல் கற்றளிக் கோவில்...

 மலைமீது பல்லவர்கள் சிவனுக்காக கட்டுவித்த முதற் கற்றளி கோவிலாக பனமலை தாளகிரீஸ்வரர் கோவில் இன்றும் காண்போரை பரவசமூட்டும் வண்ணம் உள்ளது. சிறுகுன்றினைச் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் நீர்சூழ் ஏரி ஒரு புறமும், பச்சைப்பசேல் என வயல்வெளி ஒருபுறம் அப்பப்பா பல்லவர்களின் ரசனைக்கு சான்று பகிர்வதோடு நில்லாமல் கோவிலின் உட்புற சுவற்றில் இயற்கை சாந்து கொண்டு 1300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட நடராஜர், பார்வதி தேவியின் திருவுருவம் இன்று சிதிலமடைந்து இருந்தாலும் காண்பவரை மெய்மறக்கச் செய்யும். 

   கல்கி அவர்கள் எழுதிய சிவகாமியின் சபதம் சுட்டும் மாமல்லையின் கட்டுமானம் இன்றும் பாரெங்கும் புகழ்பெற்று விளங்க காரணமாய் அமைந்த தோற்றுவாய்க் கோவில்கலான இக்கோவில்கள் இன்று தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும்  அவற்றின் புகழ் பார் அறியாது போனாலும் குறைந்தபட்சம் அருகிலுள்ள அம்மாவட்ட மக்கள் கூட இன்னுமும் அதன் அருமை, பெருமைகளை அறிந்து கொள்ளாமல் இருப்பது சற்றே வருத்தம் அளிக்கிறது.உலகமே போற்றும் மகாத்மா காந்தி ஓர் இந்தியர் என்று உலகம் அறிந்த மட்டும் போதும் ஆனால் நமக்கோ அவரது பூர்வீகம் தொட்டு அவரை முழுதும் அறிந்து வைத்துக்கொள்வதே நாம் அவருக்கு செய்யும் மரியாதை அதுபோல, பல்லவர்களின் கட்டடக்கலையை மல்லையில் மட்டுமே ரசிக்கும் நாம் மேற்கண்ட இடங்களிலும் பார்த்து ரசித்திட "யான்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்ற ஆவல் இச்சமயம் மேலிடுகிறது என்னிலும்....நன்றி


முருகதாஸ் வெ,                  (தொடக்கப்பள்ளி ஆசிரியர்).      murugadossnk2012@gmail.com

                           மேலச்சேரி 


                          தளவானூர்


                            சிங்கவரம்


                          சீயமங்கலம்



                         மண்டகப்பட்டு

Comments

Popular posts from this blog

எண்ணாயிரம் மலை