மண்டகப்பட்டு - லக்ஷிதாயதனம்
செஞ்சிலியிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சரியாக 17கிமீ பயணித்து முட்டத்தூரை அடைந்து அங்கிருந்து இடதுபுறமாக சுமார் 600மீ தூரத்தில் சாலையை ஒட்டியிருந்த இந்தியத் தொல்லியல் துறையின் பலகை எங்களை பல்லவர் மன்னனின் முதல் பொக்கிஷம் தனைக் காண அழைப்பு விடுத்தது. மகன் அப்பா எங்கு பார்த்தாலும் ஒரே பாறையாக உள்ளதே எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே என்று வினவ சற்று பொறு என்னுடன் அமைதியாக வாவென்று நான் முன்செல்ல பிள்ளைகள் இருவரும் சற்றே பயம் கலந்த தயக்கத்துடனே என் பின்னால் வந்தனர். இரண்டு சிறிய பாறைகளுக்கு நடுவில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு வழி ஒன்று தென்பட அதில் நுழைந்ததும் கண்களில் பட்டது பல்லவர்களின் காலத்தால் அழியாத முதல் கலைப் படைப்பு. ஒரு பெரிய பாறையின் அடிவாரத்தினை அகழ்ந்தெடுத்து அற்புதமாக வடித்து வைத்த குடைவரையைக் கண்டதும் என்னோடு சேர்ந்து பிள்ளைகளின் கண்களிலும் ஒரு வித திகைப்பினைக் கண்டேன்.
வாகனத்தில் வந்த களைப்பு நீங்க கொண்டுவந்த தண்ணீர் பாட்டில்களில் இரண்டினை காலி செய்தோம்.பாறையில் சற்று உயர்ந்த பகுதியில் அமைந்த குடைவரையைக் அடைய படிக்கட்டுகள் இருந்தது. மேலேறும் போதே உடல் சிலிர்க்கத் தொடங்கியது எனக்கு.
வலதுபுற துவார பாலகர் என்னை கம்பீரமாக நின்று வரவேற்பு அளித்தார். தொடர்ந்து உள்நுழைய அர்த்தமண்டபம் மற்றும் மூன்று தனித்தனி பிரகாரங்கள் இருந்தன.ஏற்கனவே சொன்னது போல மும்மூர்த்திகளும் பள்ளி கொண்ட குடைவரை இதுவாகும். தற்போது அதில் சிலைகள் யேதுமில்லை.
பட்டப் பெயரான 'விசித்திர சித்தன்' எனும் பெயருக்கு சற்றும் சளைக்காத கலைப் படைப்பினை இங்கு வடித்துள்ளான். அவன் பெற்ற பல்வேறு சிறப்புப் பட்டப் பெயர்களில் 'லக்ஷிதன்' எனும் ஒரு பெயரிலேயே இக்கோயில் "லக்ஷிதாயதனம்" என்றும் அழைக்கப்படுகிறது.
மும்மூர்த்திகள்
இக்கோயில் பிரம்மா, சிவன், மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்காக உருவாக்கப்பட்டது. என்பதை அங்குள்ள மண்டபத் தூணில் உள்ள கல்வெட்டின் வாயிலாகவே அறிய முடிகிறது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதி (சுமார் பொ.யு. 590 - 630) பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் மனதில் உதித்த எண்ணம் இன்று 1400 ஆண்டுகள் கழித்து என்னை இங்கு வர வைத்து அவன் பெற்ற இன்பம் பிள்ளைகளோடு சேர்த்து என்னையும் பெற வைத்துவிட்டது.
இக்கோயிலில் உள்ள மகேந்திரவர்மனின் புகழ்பெற்ற சமஸ்கிருதக் கல்வெட்டு, கோயில் கட்டுமானத்தின் பரிமாணத்தை கூறுகிறது.இந்த வரலாற்றுச் சின்னம், தமிழ்நாட்டின் கட்டிடக் கலைக்கு வித்திட்ட முதல் கல்வெட்டுச் சான்றாகத் திகழ்கிறது என்பதும் ஆகச்சிறந்த உண்மை.
"செங்கல், மரம், உலோகம், சுதை போன்ற வழக்கமான பொருட்கள் இல்லாமல் பிரம்மன், சிவன், விஷ்ணு ஆகியோருக்கு விசித்திர சித்தன் இக்கோயிலை அமைத்துக் கொடுத்தான்.
என்பதே கல்வெட்டில் சாராம்சம். தமிழகத்தின் கட்டிடக் கலை வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய முதல் குடைவரைக் கோயில் இதுவே.
குடைவரையின் எதிரில் அமைந்திருந்த ஒரு கல்லால் ஆன இருக்கையில் சில மணித்துளிகள் இளைப்பாறிவிட்டு அடுத்து நாம் சோழர்களை சந்திக்க போகிறோம் என்றதும் பிள்ளைகள் இருவரும் உற்சாகமாக போகலாம் என்றனர். நானும் 1400 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று அந்த காலகட்டத்தில் சிறிது நேரம் பயணித்த பரவசத்தை அனுபவித்துவிட்டு இந்த வாய்ப்பை நல்கிய மகேந்திர வர்ம பல்லவனுக்கு நன்றி கூறிவிட்டு பிள்ளைகளோடு அங்கிருந்து விடைபெற்றேன்.
அடுத்து சோழர்களைத் தேடி பயணம் மேலும் தொடர்ந்தது...
நன்றி...
மேலும் படங்கள்










Comments
Post a Comment