பிரம்மதேசம் - பிரம்மபுரீஸ்வரர்.

  

 பல்லவர்களை காண சுமார் 50 கிமீ சென்ற எங்களை மண்டகப்பட்டில் இருந்து 5 கி.மீ தொலைவிலேயே சோழர்கள் வரவேற்கத் தயாராக இருந்தார்கள். இவ்வூரில் பழமையான இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. பாடலீஸ்வரர் ஆலயம் ஊரின் நடுவிலும், பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் ஊரின் வடக்குப் பகுதியில் ஏரிக்கரையின் அருகேயும் அமைந்திருக்கின்றன.

 முதலில் ஊரின் நடுவிலுள்ள கோவிலுக்கு சென்றோம். அங்கு கோவிலில் மீட்டெடுப்பு பணிகள் நடைபெறுவதால் வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு கோவிலைப் பராமரிப்பவர்களுள் அம்மையார் ஒருவர்  ஏரிக்கரையின் அருகே அமைந்துள்ள கோவிலுக்கு முதலில் சென்று வாருங்கள், அங்கு ஐயர் இன்னும் கொஞ்ச நேரமே  இருப்பார் எனவும் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் மாலை வரை திறந்தே இருக்குமெனக் கூறினார்.    

 அவரிடம் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து வந்த வழியே ஒரு 200 மீ சென்று ஏரிக்கரை செல்லும் வழியினை ஒரு பெட்டிக்கடையில் கேட்க அவர்கள் இந்தத் தெருவில் கடைசியாக சென்றால் நீங்கள் கேட்கும் கோவிலை அடையலாம் என்று கூற வாகனத்தில் வேகம் பிடிக்க சரியாக 700 மீ தூரத்தில் கோவிலை அடைந்தோம்.பெரிய இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டு மிகப் பிரமாண்டமாக மதில்சுவரோடு இருந்தது.கதவருகே வாகனத்தை நிறுத்தி விட்டு கடகடவென கோவிலுக்குள் பிரவேசம் ஆனோம். 

 ஏரிக்கரையில் ஓரத்தில் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து இக்கோயில் காணப்படுகிறது. பெரும்பாலும் வெளிப்புறத்தில் உள்ள மண்டபங்கள், சுவர்கள், ராஜகோபுரம் உட்பட அனைத்தும்  உருக்குலைந்து காணப்பட்டதைக் காணும்போது கண்களில் ஈரம் கசியத் தொடங்கியது.

 ராஜகோபுரத்தை ஒட்டிய அர்த்த மண்டபத்தின் நிழலில் இளைப்பாற உட்கார்ந்து இருந்த உள்ளூர் ஆட்கள் சிலர் எங்களை எங்கிருந்து வருகிறீர்கள் என்ற விசாரணையோடு சீக்கிரமாக உள்ளே செல்லுங்கள் பூசை தொடங்கும் நேரம் என்று கூற முதலில் பிரம்மபுரீஸ்வரரை தரிசிக்க கருவறை இருக்கும் பிரகாரத்துக்குள் நுழைந்தோம்.சதுர வடிவ கருவறையில் பிரமாண்ட திருமேனியோடு கிழக்கு நோக்கி பாணலிங்கமாக பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார். கோயிலின் கருவறையின் அருகில் இருந்து பார்த்தால் இறைவன் உள்ள கருவறை சற்று மறைந்து நம் கண்ணுக்கு தெரியும் அதுவே முன்னே உள்ள மண்டபத்தில் இருந்து பார்த்தால் கருவறையோடு இறைவன் முழுவதும் தெரிகிறார். பயணத்தைக் தொடங்கும்போது ஏற்பட்டத் தடங்கள் ஈசனை சரியான நேரத்தில் தரிசிக்கவே என்பதை உணரும் போது மெய்சிலிர்த்துப் போனது. 

 சற்று ஆற அமர பூசையினை கண்டுவிட்டு ஐயர் தந்த பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தோம்.பின் ஐயரிடம் கோவிலைப் பற்றிய விவரங்களையும் பூசை மற்றும் விசேஷ நாட்கள் பற்றிய தகவல்களையும் கேட்டறிந்தோம்.பின் அவருடைய அலைபேசி எண்ணை வழங்கி நீங்கள் வருவதாக இருந்தால் என்னை அழைத்துவிட்டு எப்போது வேண்டுமென்றாலும் வாருங்கள் என்று வாஞ்சையோடு கூறினார். 

 இறைவனைக் கண்ட திருப்தியில் கோவிலை உட்புறமாக ஒரு வலம் வரத் தொடங்கினோம். ஆலயத்தின் கருவறையை சுற்றி நிறைய கல் தூண்கள் காணப்படுகின்றன . அவைகளில் எந்தவிதமான சிற்பங்களும் காணாமல் வெறும் உருளை வடிவ கற்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஒருகாலத்தில் பள்ளிசாலையாக இருந்தமையால் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது அனுமானம்.

 முக மண்டபத்தின் தெற்கு திசையில் அன்னை  பெரியநாயகி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.  மேல் வலது கரத்தில் அல்லி மலர், மேல் இடது கரத்தில் தாமரை, கீழ் வலது கரத்தில் அபயஹஸ்தம், கீழ் இடது கரத்தில் வரத முத்திரை என அன்னை எழிலுறக் காட்சி கொடுக்கிறாள். அன்னை இந்தத் திருக்கோலத்தில் தரிசனம் தருவது இந்தத் தலத்தில் மட்டுமே.


 மகாமண்டபம் முன்புறம், பிரமாண்ட முகமண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் நான்கு வரிசையில் பன்னிரண்டு தூண்கள் இருக்கிறது. பிரகாரத்தில் கலைநயம் மிக்க விநாயகர், லிங்கம், நின்ற கோல விநாயகர், வள்ளி– தெய்வயானையுடன், வஜ்ஜிரப் படை, சக்திபடை ஏந்திய முருகப்பெருமான், துர்க்கை, பைரவர் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. வடதிசையில் சண்டிகேஸ்வரர், அருகே நவக்கிரகங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

 தேவக்கோட்டத்தில், தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே பிரம்மன் ஆகியோர் காட்சி தருகின்றனர். முப்புறமும் 24 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. லிங்கத்தை வழிபடும் அடியார், பசு, காகம், நாகம், மீன் ஆகிய சிவபுராணச் சிற்பங்களும், பஞ்சதந்திரக் கதைகளை நினைவுபடுத்தும் சிற்பங்களும் இக்கோவிலின் தனிச் சிறப்புகளாக உள்ளன.

 அனைத்தையும் கண்டுவிட்டு வெளியில் வந்தோம். பெரும் பரப்பளவில் அமைந்த இக்கோவிலினை பிரம்மாண்ட மதில்சுவர் கொண்டு அமைக்கப்பட்டு இருந்ததை அங்கு எஞ்சியிருந்த மதில்சுவரின் எச்சங்களைக் காண்கையில் புலப்பட்டது. மதில்சுவரின் ஒருமுனையில் ஏறி நின்று பார்க்க பெரிய ஏரியும் அதனை ஒட்டிய சிறுசிறு குன்றுகளின் அழகும் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

இராசராசனாக இராசேந்திர சோழன்...

 தந்தையின் புகழ் பரப்பும் நிகழ்வில் மகனே தந்தையாக வேடம் பூண்டு மேடையேறி நாடகம் ஆடிய பெருமை கொண்டது இந்த கூத்து மேடை. இன்றைய நாட்களில் நடைபெறும் தெருக்கூத்தின் தொடக்கப் புள்ளியாகக்கூட இங்கு நடந்த நிகழ்வு இருக்கலாம் என்பது எனது கருத்து. 


 இந்த ஆலயத்தில் இதுவரை 42-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் மிகவும் தொன்மையான கல்வெட்டு, குலோத்துங்க சோழனின் கல்வெட்டு. இங்கு ஆய்வு மேற்கொண்டபோது கிடைத்த துர்கை சிலை பல்லவர்கள் காலத்தை சேர்ந்ததாக அறியப்படுகிறது.  அப்படிப் பார்த்தால் இந்த ஆலயத்தின் தொன்மை 1000 ஆண்டுகளைவிடவும் அதிகமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. விக்கிரமசோழன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், தம்புராயர்கள், விஜயநகர மன்னன் மற்றும் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் உள்ளன.

 சோழர்கால கல்வெட்டுகளில், சோழர்கள் காலத்தில் செய்யப்பட்ட தானங்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இங்கு மடம் ஒன்று செயல்பட்டு துறவிகளுக்கு உணவு அளிக்கப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. மேலும் பாண்டியர் கால கல்வெட்டுகளில் மக்களுக்கும், வணிகர்களுக்கும் விதிக்கப்பட்ட வரிகளின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

1.கொசக்காணம்: குயவர்கள் மண்பாண்டம் செய்பவர்கள் தங்கள் தொழிலுக்காகச் செலுத்த வேண்டிய வரி 

2.கல்யாணக்காணம்: பொது மக்கள் தங்கள் வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தும்போது அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி.

3.செக்குவரி: எண்ணெய் ஆட்டும் செக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தொழிலுக்காக அரசுக்குச் செலுத்திய வரி.

4.அழுகல்சரக்குவரி: சந்தையிலோ அல்லது அங்காடியிலோ அழுகிப்போகும் நிலையில் உள்ள காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது விதிக்கப்பட்ட வரி.

5.அங்காடிபாட்டம்: பொதுச் சந்தையில் கடை வைத்து வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகள் அரசுக்குச் செலுத்திய வாடகை அல்லது வரி (பாட்டம் என்றால் வாடகை/கட்டணம்).

6.தட்டாரபாட்டம்: தங்க, வெள்ளி நகைகள் மற்றும் உலோக வேலை செய்யும் பொற்கொல்லர்கள் தங்கள் தொழிலுக்காகச் செலுத்திய வரி.

7.குயவர் செலுத்துவரி: மண்பாண்டத் தொழிலாளர்கள் மண் எடுப்பதற்கும், தொழில் செய்வதற்கும் தனிப்பட்ட முறையில் செலுத்திய தொழில் வரி.

போன்ற... வரி'கள் பற்றிய தகவல்கள் விரிவாக இடம் பெற்றுள்ளன.

 விஜயநகர மன்னன் ஆட்சியின்போது பெரும் மழை ஒன்று பொழிந்து இங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது கோயிலின் பலபகுதிகள் சிதிலமடைந்தது மீண்டும் அவை புனரமைக்கப்பட்ட விதத்தையும்  கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

 எண்ணிலடங்கா அற்புதங்களையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் இந்த பொக்கிஷத்தை இத்தனை வருட காலம் காணாமல் இருந்ததை எண்ணி ஒருகணம் மனம் வாடினாலும் ராஜேந்திரச் சோழன் நின்று களமாடிய மேடையில் என்னையும், பிள்ளைகளையும் பொருத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சியில் லயித்துப் போனது மனது...

மேலும் செய்திகள்:-

 காஞ்சி மகா பெரியவரின் "தெய்வத்தின் குரல்" இரண்டாம் பாகத்தில் பிரம்மதேசம் பற்றியும், இவ்வூர் அந்தணர்கள் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் இப்பகுதி குறித்தும், அங்கு நிகழ்ந்த மன்னர்களின் வாழ்க்கையைப் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பயணக் களைப்பு முற்றிலுமாக நீங்கி மனம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைக்க அங்கிருந்து பாட(த)லீஸ்வரரை தரிசிக்க கிளம்பினோம்.

பயணம் தொடரும்...

நன்றி

மேலும் படங்கள் 










Comments

Popular posts from this blog

எண்ணாயிரம் மலை