பிரம்மதேசம் - பாடலீஸ்வரர்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து வெளியேற நண்பகல் ஆகிவிட்டதனால் பிள்ளைகளுக்கு ஒரு பெட்டிக்கடையில் குளிர்பானம் வாங்கிக் கொடுத்துவிட்டு கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலில் ஒன்றை நான் காலி செய்ய மீண்டும் புறப்பட்ட அதே இடமான பாடலீஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஊரின் நட்ட நடு நாயகமாக அமைந்திருந்த கோவில் வாயிற் கதவினை அடைந்து பிள்ளைகளை வாசலின் வலதுபுறம் அமைந்திருந்த வேப்பமர நிழலில் சற்று ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு கோவிலை ஒரு முழு சுற்று சுற்றிவிட்டு வர புறப்பட்டேன். எனது மகன் நானும் உடன் வருகிறேன் என்றவுடன் மகளை அங்கிருந்த அம்மையாரிடம் பேசிக்கொண்டு இருக்கும்படி சொல்லிவிட்டு இருவரும் கோவிலை வலம் வந்தோம்.
முதலில் முன்கோபுரம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றோம்.கிழக்கு நோக்கிய கோபுரத்தின் பீடம் மட்டுமே எஞ்சியிருக்க அதுவும் சரியான பராமரிப்பு இல்லாமல் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளின் கால்நடைகளை கட்டி வைக்கும் இடமாகவே மாற்றம் பெற்று இருந்தது.
கோபுரத்தைத் தொடர்ந்து மகாமண்டபமும் மேற்கூரை முழுவதும் சிதைக்கப்பட்டு தளம் போடாத வீட்டினை ஒத்த அமைப்பில் இருந்தது.ஆனால் அதில் ஏறுவதற்கு படிகளோ, வழியோ எதுவும் இல்லாமல் இருக்க ஒன்றும் புரியவில்லை.கோவில் கருவறைக்கும் மகாமண்டபத்திற்கும் இடையே வழி அமைத்து பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இந்தக் கோவில் இன்று சிதிலத்திற்கு ஆளாகி உள்ளது என்பதே அப்போது தான் புரிந்தது எனக்கு.ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில் முன்கோபுரமும்,மகாமண்டபம் காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைய யாரோ ஒருவரின் ஆதிக்க வெறி மட்டுமே காரணமாக இருக்கும்போது அதை என்னவென்று இங்கு குறிப்பிடுவது.
அப்போது தான் அந்தக் கல்வெட்டு எனது கண்களில் பட்டது.அதுசமயம் புத்தகம் ஒன்றில் நான் படித்த அந்தக் கல்வெட்டு சாசனம் நினைவுக்கு வந்தது. அருகில் சென்று அதைப் படிக்க முற்படலானேன். சோழ மன்னனான ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம் கல்வெட்டுகளில் ‘பாதாலீஸ்வரர் ஆலயம்’ என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் எண்ணற்ற தகவல்களை இயம்பும் பலக் கல்வெட்டுகளின் தொகுப்பும் இங்கு காணக் கிடைத்தது. கல்வெட்டுகளை புதிதாகப் படிப்பவர்கள் இங்குள்ள கல்வெட்டுகளை படிக்கத் தொடங்குவது மிகவும் உத்வேகமாக அமையும் என்பது எனது கருத்து.
உதாரணமாக ராஜராஜ சோழன் ‘பிடாரிபட்டு’ என்னும் கிராமத்தில் உள்ள ‘சப்தமாதர்கள்’ (ஏழுகன்னியர்) ஆலயத்துக்கு தானம் கொடுத்ததற்கான கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன.
இவற்றை பார்த்து முடிப்பதற்கும் நண்பகல் நேரம் ஆகிவிட்டிருந்தது. சரசரவென படிகளில் ஏறியவண்ணம் சோழர்களின் கைவண்ணத்தில் அமைந்த கலைநயத்தினைக் கண்ணாரப் பார்க்கும் போது அவர்களின் ரசனைக்கு ஒரு சல்யூட் அடிக்கத் தோன்றியது. நேர்த்தியாக செதுக்கப்பட்ட படிகளின் கைப்பிடிச் சுவர் அத்துணை அழகாக இருந்தது.
அதுவரை வெயிலின் தாக்கத்தை அனுபவித்த எங்களுக்கு சில்லென காற்று எங்கிருந்து வந்ததோ என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்க்க ஒரு கோவிலை நிர்மாணிக்க வெற்று இடம் மட்டும் போதாது அதற்கு அப்பாலும் எத்தனையோ விஷயங்கள் இருப்பதை ஒருகணம் நினைக்கையில் சோழர்கள் இன்னும் நிறைய இருக்கிறது உள்ளே வாவென்று அழைக்க அந்த சில்லென்ற காற்றினை முழுவதுமாய் அனுபவிக்க, முற்படுகையில் ஆலயத்தின் கருவறை வாயிலில் உள்ள 6 அடி உயரம் கொண்ட இரண்டு துவார பாலகர் சிலைகள் பச்சை வண்ண கற்களால் வடிவமைக்கப்பட்ட அழகினை காணக் கண்கோடி போதாது. அதற்கு மேல் பூதகணங்கள் அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டு அவையும் கண்களுக்கு விருந்தாகவே அமைந்தது.
கருவறை நோக்கி எனது கண்கள் விரிய அங்குள்ள தூண்களைக் கண்டதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பயணத்தில் கி.பி எட்டாம் நூற்றாண்டு வாக்கில் ஹோய்சாளர்களின் கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட தூண்களின் அழகினை கர்நாடகா மாநிலத்தில் பார்த்து வியந்த எனக்கு அதற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்னமே அதே பாணியிலமைந்த தூண்களின் வடிவமைப்பில் அசத்திய நம் சோழர்களை என்னவென்று சொல்ல, வார்த்தைகளைக் கடன் வாங்கினாலும் சொல்லித் தீராது போலும்...
ஆலயத்தின் விமானம் வட்ட வடிவில் செங்கல் சுதைகொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சுதையாவும் காலப்போக்கில் சிதைந்து வெறும் செங்கற்கள் காட்டுமானமாகவே காட்சியளிக்கிறது. பெருவாரியான சோழர்களின் கோவில்களில் விமானம் இங்ஙனம் சுதை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது கோவிலின் தாங்கு தளத்தின் எடையினை குறைக்க என்றே கருதுகிறேன். மேலும் கருவறையின் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்து ஆலயத்தின் தொன்மையை எடுத்து இயம்புகின்றன.
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன. அதன் காரணம் கொண்டே முன்பு நான் கூறியதைப் போலவே வழிபாடுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் அவை முடிக்கப்பட்டு மீண்டும் ஒருமுறை கோவிலின் முழு அழகினையும் காண ஆவலுடன் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானோம். நேரம் 11.45 ஆகிவிட்டது எசாலம் கோவிலுக்குச் சென்றாலும் இறைவனையும் கோவிலையும் காண இன்னொரு நாள் தான் வரவேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டதோடு அங்கிருந்த பராமரிப்பு பணி செய்யும் அம்மையாரிடம் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.
ஒரு சிறிய ஊரில் அதுவும் ஒன்றல்ல இரண்டு பிரமாண்டக் கோவில்களை எழுப்பியதை எண்ணும் போது இந்த ஊர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் எவ்வளவு சீரும் சிறப்பும் பெற்று விளங்கியிருக்கும் என்பதும் புலனாகிறது. அதேசமயம் ஏன்? இவ்வளவு முக்கியத்துவம் இந்த சிறிய கிராமத்திற்கு கொடுத்தனர் என்பது புரியாதப் புதிராகவும் தோன்றியது. பிரம்மதேசம் எனும் பெயர் எத்துணை பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளது என்ற எண்ண ஓட்டமும் அதனூடே மனதில் ஓட வாகனமும் சற்றே வேகமெடுத்தது எசாலம் நோக்கி...
நன்றி...பயணம் தொடரும்















Comments
Post a Comment