எசாலம் எனும் எய்தார்

  சோழா்களின் வரலாற்றுப் பொக்கிஷத்தை அறிய “தோற்றுவாயாய்” அமைந்த எசாலம்  கிராமத்தின் நடுநாயகமாக  எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியாக எழுந்தருளியுள்ள ஶ்ரீராமநாதேஸ்வரா் திருத்தலமே எங்களின் அடுத்த பார்வை. நேரம் சரியாக 11.50 இருக்கும் கோவில் நடை இன்னும் சாத்தப்படவில்லை என்ற மகிழ்ச்சியில் அவசர அவசரமாக வாகனத்தை மர நிழலில் அமர்த்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம்.

                  
                ஶ்ரீராமநாதேஸ்வரா்

 கருவறையில் லிங்கமூா்த்தியாக ஶ்ரீராமநாதேஸ்வரா் அருட்காட்சி தருகின்றாா். லிங்கத்தின் நெற்றியில் பிரம்ம சூத்திரக் கோடுகள் காணப்படுகின்றன. கருவறையிலுள்ள தூங்காவிளக்கின் ஒளியில் அழகுறக் காட்சி தருகின்றாா் அருள்மிகு ஶ்ரீராமநாதேஸ்வரா்.

                   

  கண்களும் மனமும் முகிழ்க்க வணங்கி முடித்து அர்த்தமண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருந்த சிலைகள் மற்றும் படக்காட்சிகளை கண்டுவிட்டு வெளியில் வர பூசாரியும் நடையினை அடைத்த வண்ணம் பின்னாடியே வந்து கொண்டிருந்தார். 

  அடடா அவ்வளவுதான் போல மேற்கொண்டு எதையும் பார்க்க எங்களுக்கு பாக்கியம் இல்லை என்று வெளியே வர அப்போது பூசாரியின் நண்பர் ஒருவர் உள்ளே வர கோவிலின் பெருங்கதவின் நிழலில் இருவரும் உரையாடத் தொடங்க இதுதான் சமயம் என்று கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு வருகிறேன் என அவரிடம் கேட்க தாராளமாக சென்று பொறுமையாக வாருங்கள் நாங்கள் கொஞ்ச நேரம் இங்கே தான் இருப்போம் என்று கூற... வந்த அந்த நண்பருக்கு மனதில் நன்றி கூறிக்கொண்டே கோவிலை வலம் வரத் தொடங்கினோம்.

  முதலாம் இராஜேந்திர சோழன் காலத்திய (கி.பி.1014−1044) கற்றளிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது இத்தலம். எண்ணாயிரம், பிரம்மதேசம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊா்கள் இயற்கை எழில் சூழ்ந்த இந்த எசாலம் அருகே அமைந்துள்ளன.

             

 கருவறை விமானம் முழுவதும் கற்றளியாக அமைக்கப்பட்டு கவின் மிகு தோற்றத்துடன் விளங்குகின்றது. 

        

  மகாமண்டபத்தின் கீழ்திசைச் சுவரில் நவ துவார ஜன்னல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் தைத்திங்கள் முதல் நாள் சூரியனின் ஒளிக்கதிா்கள் இந்த ஜன்னலின் வழியாக ஶ்ரீராமநாதேஸ்வரப் பெருமானின் திருமேனியில் விழுகின்ற வகையில் இக்கற்றளியை நிா்மாணித்துள்ளதை சோழ மன்னா்களின் கட்டடக் கலையின் பேரார்வத்தின் வெளிப்பாடே.

                    

  கருவறை விமானம் ஒரு தள விமானமாக வட்ட வடிவில் அமைந்துள்ளது. விமானத்தின் நான்கு திசைகளிலும் அமைக்கப்பட்ட கற்சிற்பங்களின் நோ்த்தியான வேலைப்பாடுகள் சோழா் கால சிற்பிகளின் திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளன. விமானத்தின் மேல் பகுதி மகாபத்மம் விரிந்த தாமரை மலராகக் காட்சிதரும் அழகிய தோற்றம் நம் கண்களை விட்டு அகல மறுக்கின்றது. இத்தலத்தின் பலி பீடம் அனைவரது கவனத்தையும் கவரும் வண்ணம் சிறப்பான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. முதலாம் இராஜேந்திர சோழன் காலத்திய மிகச்சிறப்பு வாய்ந்த பலிபீடத்திற்குச் சான்றாக இது திகழ்கின்றது.

 ஒருவழியாக கோவிலின் முழுமையாக பார்த்த திருப்தியில் அங்கிருந்து விடைபெற முன்வாசலுக்கு வந்தோம்.இன்னமும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க அவர்களிடம் நன்றி கூறிவிட்டு மூவரும் அங்கிருந்து வெளியேற வந்த வழியில் வாகனத்தை செலுத்த அங்கே பெரிய சிற்பம் ஒன்று பாறைப்பலகையில் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டு இருந்தது. ஒரு நிமிடம் இதைப் பார்த்துவிட்டு போகலாம் என்று பிள்ளைகளிடம் கூற அவர்களும் சரி அப்பா எனக் கூற வாகனத்தில் இருந்து இறங்கி பார்த்தோம்.

கால்நடைகளின் நோய் தீர்க்கும் அரு மருந்து

 கல்ராயன் சிலை

 ஐயனாா் சிலை போன்று உள்ள அந்தச்சிலை கல்ராயன் சிலை என்று மக்களால் அழைக்கப்படுகின்றது. ஒரு முறை எசாலத்தில் உள்ள கால்நடைகளுக்கு கண்டறிய இயலாத நோய் தாக்கியபோது கால் நடை மருத்துவா்கள் வந்து மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லை. பின்னா், இத்தல அன்பா் ஒருவருக்கு அருள்வந்து கோயிலுக்கு வெளியில் இருக்கும் சிலைக்குத் தண்ணீரால் அபிஷேகம் செய்து அந்த அபிஷேக நீரை கால்நடைகள் அருந்த நோய் நீங்கும் என்று கூற மக்களும் அதே போல இச்சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை கால்நடைகளுக்கு அளிக்க நோய் குணமானது. அன்றுமுதல் இன்றுவரை எசாலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் இந்த வழக்கத்தைப் பின்பற்றி பலன் பெறுவதாகத் தெரிவித்தனர்.

இணையம் வாயிலாக கிடைக்கப் பெற்றத் தகவல்கள்...

எசாலம் செப்பேடு

“பிடாகை எய்தாாில் நம் உடையாா் சா்வசிவ பண்டிதா் எடுப்பித்தருளின திருக்கற்றளி திருவிராமீஸ்வரமுடைய மாதேவா்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இருப்பதாக நமக்கு யாண்டு பதினைஞ்சாவது முதல் தேவதானமாக வரியிலிட்டுக் குடுக்கவென்று நாஞ்சொல்ல” 

  எசாலம் திருக்கோயிலை இராஜேந்திர சோழனின் குருவான சா்வசிவ பண்டிதா் என்பவா் நிா்மாணித்துள்ளாா். இவ்வூரின் புராதனப் பெயா் எய்தாா் என்பதாகும். இக்கோயிலுக்கு மன்னா் இராஜேந்திரன் தன்னுடைய 15 ஆம் ஆட்சியாண்டில், ஏா்ப்பாக்கம், நன்னாடு என்ற இரு ஊா்களையும் ஒன்றாக சோ்த்து அதற்கு “விக்கிரம சோழ நல்லூா்” என்று பெயரிட்டு 3400 கலம் நெல்லை திருவிராமீஸ்வரம் கோயிலுக்கு இறையிலியாக அளித்திருப்பதை எசாலம் செப்பேடு உணா்த்துகிறது. இந்த ஆணை இம்மன்னரது 24 ஆம் ஆட்சியாண்டில் கி.பி.1036 ல் நிறைவேற்றப்பட்டு செப்பேடாக வடிக்கப்பட்டுள்ளது. 15 இதழ்கள் கொண்ட எசாலம் செப்பேடுகள் ஒரு வளையத்தில் கோா்க்கப்பட்டு அவ்வளையத்தில் சோழ மன்னரின் அரச முத்திரை காணப்படுகிறது. தற்போது சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இச்செப்பேடு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

முத்திரையின் விளிம்பில்,

ராஜத்ராஜஸ்ய மகுடஸ்ரேணிரத்னேஷுஸாசஸனம்

ஏதத் ராஜேந்திர சோளஸ்ய பரகேசாிவா்ம்மனஹ”

என்று கிரந்த எழுத்தில் பொறிக் கப்பட்டுள்ளது.

விளக்கம்

“அரசா்களின் திருமுடி வரிசைகளின் ரத்தினங்களில் திகழ்வதான இது பரகேசாிவா்மனான இராஜேந்திர சோழனின் சாசனம்” என்பது இதன் பொருளாகும். 

 இராஜேந்திர சோழனைப் பற்றிக் குறிப்பிடும்போது “பகீரதன் ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தது போல கங்கை நீரைச் சோழநாட்டிற்குக் கொண்டு வந்து “சோழகங்கம்” என்ற பெரிய ஏரியை உருவாக்கியதுடன் கங்கை கொண்ட சோழபுரியையும் உருவாக்கினான்.தங்கள் இஷ்ட தெய்வமான சிவபெருமானுக்குப் பெரிய கோயிலையும் கட்டினான்” என எசாலம் செப்பேடு குறிப்பிடுகின்றது.

கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயில் பற்றிக் கிடைக்கும் முதற்குறிப்பு

  கடலிலே கலங்கள் செலுத்தி கடாரத்துடன் சுமத்திரா மற்றும் ஜாவாத் தீவுகளை வென்று மாபெரும் வெற்றிக்கனிகளைப் பறித்த மன்னன் ராஜேந்திரன், கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவனுக்கு கங்கை கொண்ட சோழீச்சரம் என்ற பெருங்கற்றளியை நிா்மாணித்தான் என்ற தகவல் இத்தலத்தில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளின் மூலமாகவே அறிந்துகொள்ள முடிந்தது என்பது அரிய செய்தியாகும்.

 இச்செப்பேட்டு செய்திகளைப் பொறித்தவா் உலகளந்த சோழ ஆச்சாாி என்பவராவா்.

மேலும் படங்கள் 






நன்றி பயணம் தொடரும்... 









Comments

Popular posts from this blog

எண்ணாயிரம் மலை