எண்ணாயிரம் - சோழர்களின் OXFORD

 ஒரு வழியாக காலையில் பார்க்க வேண்டிய வரலாற்றுத் தடங்கள் அனைத்தும் பார்த்தாகி விட்டது.இனி மதிய உணவினை பிரதான சாலைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு அடுத்த வரலாற்றுத் தடங்களை மாலைக் காணலாம், எனப் புறப்பட்டோம். வந்தவழியே மறுபடியும்  திரும்பாமல் எண்ணாயிரம் வழியாகச் செல்ல நினைத்தோம்.அதன்படியே வாகனத்தை மெதுவாக செலுத்த வழியெங்கும் வயல்வெளிகளை நோட்டமிட்டவாறு சென்றுகொண்டிருக்க ஒரு வீட்டிற்கு முன்பாக ஒரு கூடை நிறைய கொய்(த)யா கனிகள் நிரம்ப வைத்துவிட்டு ஆள் யாரும் இல்லாதபடி இருந்தது.அநேகமாக இது விற்பனைக்குத் தான் என்று வாகனத்தை நிறுத்தி ஒலியெழுப்ப வீட்டினுள் இருந்து ஒரு நபர் வந்து கொய்யா வேண்டுமா என்றார்.ஆம் என்றவுடன் எடையிட்டு கொடுக்க இப்போது சாப்பிட மட்டும் காய்களை நெடுக்குவாட்டில் நறுக்கி காரம் உப்பு சேர்க்க எங்களின் நாவில் நீர் பெருக சட்டென மூவரும் பிரித்து உண்ண அத்துணை சுவையாக இருக்குமென நாங்கள் நினைக்கவில்லை. பூச்சிக்கொல்லி மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை போலும் என்றெண்ணிக்கொண்டே அங்கிருந்து, கொய்த கனிகளை சுவைத்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம்.

 சுமார் 15 நிமிட பயணத்தில் எண்ணாயிரம் ஊரை அடைந்தோம். ஊரின் நடுவே நேர்த்தியாக கட்டப்பட்டு இருந்த  அரசுத் தொடக்கப்பள்ளி ஒன்று கண்களில் பட அதனை நோக்கியவாறே எனது பார்வை இருக்க, அப்பா என்ற குரல் என்னை திசை திருப்பியது. என்னம்மா? என்று கேட்க கோவில் இங்கே இருக்கிறது நீங்கள் பள்ளியை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களே என்றாள் எனது மகள். சட்டென பள்ளிக்கு வலதுபுறம் கண்கள் பாய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்வி நிலையமாக இயங்கிய கட்டடமும் கோவில் கோபுரமும் மெய் சிலிர்க்க வைத்தது. அங்கிருந்த ஒரு அம்மையாரிடம் கோவில் மாலை எத்துணை மணிக்கு மீண்டும் திறப்பு என விசாரிக்க இன்று காலையிலேயே பூசை முடித்து ஐயர் சென்றுவிட்டார். மாலை வருவது சந்தேகம்தான் என்று கூற, சரி இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் கோவிலையாவது ஒரு சுற்று வருவோம் என, சுற்ற தொடங்கினோம். 

 கோவிலின் முன்புறம் அத்துணை பாதுகாப்பாக இருந்தும் பின்புறம் கால வெள்ளத்தில் சிதிலமடைந்து சுற்றுச் சுவர் முக்கால் வாசி சிதைந்த வண்ணம் இருக்க எனது மகன் அப்பா நான் மேலேறிப் பார்க்கட்டுமா? என்ற ஆவலில் கேட்க பத்திரம் என்ற ஒன்றை மட்டுமே உதிர்த்தேன், வேண்டாம் என்று கூற மனம் வரவில்லை. பெரும்பாலும் பூட்டியிருக்கும் நேரங்களில் யாரேனும் காண்பதாக இருந்தால் அவ்வழி உகந்ததாகவே இருக்கும் போல என்று மகன் ஊகிக்க சரியென நானும், மகளும் ஆகட்டும் யார் வந்து கேட்டாலும் சமாளிக்கலாம் என்று இடிந்த சுற்றுச் சுவர் ஏறி கோவிலின் உள்ளே எளிதாகவே உள்ளிறங்கி விட்டோம். சற்றே எனக்கு கொஞ்சம் பயம் தான் இருந்தாலும் இறைவனைக் காண முடியாவிட்டாலும் வந்த நோக்கம் நிறைவேறினால் சரியென கோவிலின் உள்புறமாகவும் ஒரு சுற்று வந்தோம்.

 கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உபநயனம் மற்றும் பத்ம பந்த அதிட்டானத்துடன் கூடிய உயரமான நிலையில் கருவறை கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்களில் ஒன்று பல்லவர் காலத்து சிங்கத் தூண் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.விளக்கோ வெளிச்சமோ இல்லாத காரணத்தினால் அலைபேசி வெளிச்சத்தில் கண்டாலும் அவ்வளவு நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது. 

 ராஜராஜ சோழன் இந்தக் கோயிலைப் புனரமைத்த தகவல்கள் அதிட்டானம் மற்றும் மண்டபத்தில் சோழர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் முக்கியமாகக் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்த லட்சுமி நரசிங்கர் கோயிலை மையமாகக் கொண்டு நான்கு சிவன் கோயில்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த இடம் பஞ்ச (ஸ்)தலம் என்று அழைக்கப் படுகிறது. ராமானுஜர் ஒரு விவாதத்தில் 8000 சமணர்களை தோற்கடித்து, அவர்களை பிராமணர்களாக சமயம் மாற்றினார் என்பது காலங்காலமாக செவிவழிச் செய்தியாக  இன்றளவும் ஒரு வதந்தி உலவிக்கொண்டு இருக்கிறது. மேலும் இது சிலேடைக் கவி என்று அழைக்கப்படும் காலமேகக் கவிஞரின் பிறந்த இடமாகும்.

 ஆலயத்தில் நான்கு விதமான கோலத்தில் பெருமாள் அருள்பாலித்து வருகிறார். ஒன்று, அழகிய சிங்கர் எனப்படும் லட்சுமி நரசிம்மர். இரண்டு, ஸ்ரீதேவி- பூதேவி உடனாய வைகுண்டவாசப்பெருமாள். மூன்று, லட்சுமி வராகர். நான்கு, வேணுகோபாலர். முன்னர் இவ்வூர் பருத்திக்கொல்லை' என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கு தீவிர விஷ்ணு பக்தையான பருத்திக்கொல்லையம்மாள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, ராமானுஜர் இந்தத் திருத்தலத்திற்கு வந்துள்ளார். 

 பல்லவர்களால் எழுப்பப்பட்ட  இந்த ஆலயம் அவர்களுக்கு பின்னர் சோழர்கள் ஆட்சியில் இந்த ஆலயம் பல்வேறு திருப்பணிகளால் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகச் சோழன் தனது ஒப்பற்ற கலைத் திறமையைக் கொண்டு, சிறியதாக இருந்த இந்த பெருமாள் கோவிலை, கற்கோவிலாகவும், பேராலயமாகவும் விரிவு படுத்தியதாக கல்வெட்டு சான்றுகள் எடுத்துரைக்கின்றன. பராந்தகச் சோழனால் சீரமைக்கப்பட்ட இவ்வாலயம், பின்னர் அவரது பேரனான ராஜராஜ சோழனால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

 ராஜராஜ சோழன் காலத்தில் எசாலம், எண்ணாயிரம், நந்திவாடி மற்றும் பிரம்மதேசம் ஆகிய நான்கு ஊர்களும் 'ராஜராஜ சதுர்வேதிமங்கலம்' என்று அழைக்கப்பட்டுள்ளது.இந்த நான்கு ஊர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்களை குடியமர்த்தினான், மாமன்னன் ராஜராஜன். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் எண்ணாயிரத்தில் வேத பாடசாலை ஒன்றை நிறுவினான். அந்தணர்களுக்கு வேண்டிய பொன்னும், நெல்லும் கொடுத்து, அவர்கள் தங்கும் இடத்தையும் அமைத்துத் தந்துள்ளான். சிவ வேதியர்களுக்கும், வைணவ பட்டர் களுக்கும் போதிய நிலங்களையும் தானமாக வழங்கியுள்ளான்.

 கல்லூரியின் கட்டமைப்பு

 இங்கு ஒரே கல்வி ஆண்டில் மொத்தம் 340 மாணவர்கள் தங்கிப் பயின்றுள்ளனர். அவர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். இளநிலை மாணவர்கள் (பிரம்மச்சாரிகள்) 270 பேர்முதுநிலை மாணவர்கள் (சாத்திரம் கற்போர்) 70 பேர் ஆசிரியர்கள்: இவர்களுக்குப் பாடமெடுக்க மொத்தம்    15 பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்தக் கல்லூரியில் வேதம் மட்டுமின்றி, இலக்கணம் மற்றும் தத்துவங்களும் விரிவாகக் கற்பிக்கப்பட்டுள்ளன. 

 இளநிலை பாடங்கள்: ரிக் வேதம் (75 பேர்), யஜுர் வேதம் (75 பேர்), வாஜசனேய சாமவேதம் (20 பேர்), சண்டோக சாமவேதம் (20 பேர்), அதர்வன வேதம் (10 பேர்), ரூபாவதார இலக்கணம் (40 பேர்), மற்றும் பௌதாயன கல்ப, கிருஷ்ய, ஞான சூத்திரங்கள் (10 பேர்). 

 முதுநிலை பாடங்கள்: வியாகரணம் (இலக்கணம் - 25 பேர்), பிரபாகர மீமாம்சம் (35 பேர்), மற்றும் வேதாந்த தத்துவம் (10 பேர்). 

 கல்லூரியின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காக 45 வேலி (சுமார் 250 முதல் 300 ஏக்கர்) நிலத்தை மன்னர் தானமாக வழங்கியுள்ளார். இங்குப் பயின்ற மாணவர்களுக்குத் தினசரி உணவுப்படியாக நெல் வழங்கப்பட்டது. இளநிலை மாணவர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 6 நாழி (படி) நெல்லும், முதுநிலை மாணவர் ஒருவருக்கு 10 நாழி நெல்லும் உதவித் தொகையாகத் தரப்பட்டது. மீமாம்சமும் வியாகரணமும் கற்பித்த ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு 1 கலம் நெல்லும், வேதாந்தப் பேராசிரியருக்கு 1.5 கலம் நெல்லும் ஊதியமாக வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களுக்கும் முதுநிலை மாணவர்களுக்கும் ஊதியமாகத் தங்கமும் வழங்கப்பட்ட தகவல் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

 'ஸ்ரீ ஜெயந்தி' போன்ற விசேஷ நாட்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குத் தங்க மோதிரம், தங்கத் தாமரை போன்ற பரிசுகளும், வேலைவாய்ப்புகளும் வழங்கி சோழர்கள் ஊக்குவித்தனர். பாடசாலையோடு இணைந்து ஒரு பிரம்மாண்டமான மாணவர் விடுதியும், உணவகமும் செயல்பட்டுள்ளன. தினமும் சுமார் 506 பேருக்கு (மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கோவிலில் திருவாய்மொழி ஓதுபவர்கள் உட்பட) அங்கு இலவசமாக உணவு சமைத்துப் பரிமாறப்பட்டதாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 

 இராஜராஜ சோழன் காலத்தில் இவ்வூர் 'ராஜராஜ சதுர்வேதிமங்கலம்' என்று அழைக்கப்பட்டது (நான்கு வேதங்களையும் கற்றவர்கள் வாழும் பகுதி). தமிழக வரலாற்றில், பிற்காலச் சோழர்கள் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவத்திற்கும், இலவசக் கல்வி மற்றும் தங்குமிடத்துடன் கூடிய பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இயங்கியதற்கும் இந்த எண்ணாயிரம் வேத பாடசாலையே மிகச்சிறந்த வரலாற்றுச் சான்று. இக்கோவிலுக்கு நேர் எதிரில் இயங்கும் தொடக்கப் பள்ளியில், ராஜேந்திரச் சோழன் தொடங்கி வைத்த கல்விச் சேவையை என் போன்ற ஓர் ஆசிரியர் இன்றளவும் தொடருவது எவ்வளவு பெருமை! அத்தகைய பாக்கியம் பெற்ற அந்த முகம் அறியா ஆசிரியருக்கு எனது வாழ்த்துகளைக் மனதில் (விடுமுறை நாள் என்பதால்) கூறிக்கொண்டே அங்கிருந்து விடைபெற்றோம்.

மேலும் படங்கள்




நன்றி பயணம் தொடரும்...




Comments

Popular posts from this blog

எண்ணாயிரம் மலை